இந்தியாவில் பணக்கார - ஏழை ஏற்றதாழ்வு அதிகரித்துள்ளது
ஹைலைட்ஸ்
- இந்தியாவின் 77.4 சதவிகிதம் பணத்தை 10 சதவிகிதம் மக்களே வைத்துள்ளனர்
- இந்தியாவில் 13.6 கோடி மக்கள் 2004 முதல் கடனில் இருக்கின்றனர்
- சர்வதேசத்தில் பில்லியனர்கள் ஒருநாள் வருமானம் 2.5 பில்லியன்டாலர் உயரந்தது
Davos: சென்ற ஆண்டு, இந்தியாவின் பணக்காரர்களின் வருமானம், ஒரு நாளைக்கு 2,200 கோடி ரூபாயாக இருந்துள்ளது என்று ஆக்ஸ்ஃபாம் அமைப்பு, நடத்திய ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், 1 சதவிகிதம் பணக்காரர்களின் சம்பாத்தியம் ஒரே ஆண்டில் 39 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதற்கு நேர்மாறாக, இந்திய மக்கள் தொகையின் கீழ் மட்டத்தில் இருக்கும் 50 சதவிகித மக்களின் வருமானம் வெறும் 3 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த விவரங்களை அக்ஸ்ஃபாம் வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில், கோடீஸ்வரர்களின் சம்பாத்தியம் ஒரு நாளுக்கு 2.5 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது.
இந்தியாவில், வறுமையில் வாழும் மக்களில் 10 சதவிகித மக்கள் அல்லது 13.6 கோடி பேர், 2004 முதலே கடனில் இருக்கின்றனர் எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. குறிப்பாக டாப் 9 பணக்காரர்களின் சொத்து மதிப்பும், அடிமட்ட 50 சதவிகித சொத்து மதிப்பும் ஒரே அளவில் இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக பொருளாதார கூட்டமைப்பின் 5 நாள் சந்திப்பு ஸ்விடசர்லாந்தில் நடைப்பெறுகிறது. அங்குதான் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது. மேலும் பணக்காரர்கள் – ஏழைகளுக்கு இடையே அதிகரித்து வரும் இடைவெளியையும் குறைக்க கருத்துகள் கேட்கப்பட்டன.
‘பணக்காரர்கள் பணத்தை சேர்த்து கொண்டே போகும் போது, ஏழைகள் அடுத்த வேளை சாப்பாட்டிற்குக் கஷ்டப்படுவது நியாயம் ஆகாது. இதே நிலைமை இந்தியாவில் தொடர்ந்தால், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்பு முற்றிலுமாக உருகுலைக்கப்படும்' என அக்ஸ்ஃபாமைச் சேர்ந்த வின்னி தெரிவித்தார்.
உலகின் பணக்கார மனிதரான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பு 112 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. அவரின் பண மதிப்பில் 1 சதவிகிதமானது 115 மில்லியன் மக்களை கொண்டுள்ள எத்தியோப்பியாவின் பட்ஜெட் ஆகும்.
இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வை குறித்து வின்னி கூறுகையில், ‘இந்தியாவின் முதல் 10 சதவிகிதம் பணக்காரர்களே மொத்த இந்தியாவின் 77.4 சதவிகித சொத்துகளை வைத்துள்ளார்கள். மேலும் கீழ்மட்ட 60 சதவிகித மக்கள், நாட்டின் 4.8 சதவிகித சொத்துகளை மட்டுமே வைத்துள்ளனர். இந்தியாவின் டாப் 9 கோடீஸ்வரர்ளின் சொத்தானது மக்கள் தொகையின் அடிமட்ட 50 சதவிகித மக்களின் சொத்துக்கு இணையாகும்' என அதிர்ச்சித் தகவல்களை கூறினார்.
அக்ஸ்ஃபாம் இந்தியாவின் சிஇஓ அமிதாப் கூறுகையில், ‘இந்த ஏற்றதாழ்விற்கு முக்கியக் காரணம் அரசாகும். அத்தியாவசிய கல்வி மற்றும் சுகாதாரப் பிரிவிற்கு அரசானது குறைந்த அளவிலே முக்கியதுவம் கொடுக்கிறது. மேலும் பணக்காரர்களிடம் வரி குறைவாகவே வசூலிக்கப்படுகிறது' என இந்திய அரசை கடுமையாக விமர்ச்சித்தார்.
கடந்த ஆண்டு மட்டும் 19 புதிய பில்லினியர்களை இந்தியா உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பில்லினியர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் மொத்த மதிப்பு 400 பில்லியன் டாலர் ஆகும். இந்திய அரசானது சுகாதாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு மொத்தமாக 2,08,166 கோடி ரூபாய் செலவிடுகிறது. இது முகேஷ் அம்பானியின் மதிப்பான 2.8 லட்சம் கோடி ரூபாயை விட குறைவாகும்.
இந்தியாவில் நல்ல கல்வி, சுகாதாரம் என்பது பணக்காரர்களுக்குரியதாக மாறியுள்ளது எனவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.