This Article is From Apr 02, 2019

எனக்கே என்னை அடையாளம் காட்டியவர் மகேந்திரன்: ரஜினிகாந்த் உருக்கம்

எனக்கே என்னை அடையாளம் காட்டியவர் இயக்குநர் மகேந்திரன் என நடிகர் ரஜினிகாந்த உருக்கமாக தெரிவித்துள்ளார்.

எனக்கே என்னை அடையாளம் காட்டியவர் மகேந்திரன்: ரஜினிகாந்த் உருக்கம்

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், அவர் தொடர் தீவிர சிகிச்சை பிரிவில் முழு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு டையாலிசிஸ் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் காலாமானார். அவருக்கு வயது 79. இயக்குநர் மகேந்திரனின் மறைவு தமிழ் திரையுலகினர் மற்றும் தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து அவரது உடல் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மகேந்திரனுடனான தனது நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார். அவர் கூறியதாவது, எங்களுடைய நட்பு சினிமாவை தாண்டி ரொம்ப ஆழமானது. எனக்குள் இன்னொரு ரஜினிகாந்த் உள்ளார் என்பதை எனக்கே காட்டியவர் மகேந்திரன்.

ஒரு புது நடிப்பு பரிமாணத்தையே எனக்கு கற்றுக்கொடுத்தவர். முள்ளும் மலரும் படத்தை இயக்குநர் பாலச்சந்தர் பார்த்த பிறகு நான் உன்னை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன் என்று எனக்கு கடிதம் எழுதினார். அதற்கு சொந்தக்காரர் இயக்குநர் மகேந்திரனே.

சமீபத்தில் பேட்ட படப்படிப்பின் போதுக்கூட, அவரும் நானும் நீண்ட நேரம் பேசினோம், இப்போது இருக்கும் சமூகம் மீதும், சினிமா மீதும், அரசியல் மீதும் அவருக்கு மிகுந்த அதிருப்தி இருந்தது. அவர் சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி மற்றவர்களுக்காக தன்னுடைய சுயமரியாதையை வீட்டுக்கொடுக்க மாட்டார்.

இப்போது உள்ள இளம் இயக்குநர்களுக்கும் அவர் முன்னுதாரணமாக இருக்கிறார். அவரின் இழப்பு தமிழ் சினிமாவிற்கு மாபெரும் இழப்பாகும். தமிழ் சினிமா இருக்கும் வரை இயக்குநர் மகேந்திரனுக்கும் தனி இடம் எப்போதும் இருக்கும். அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும். அவரது இழப்பில் தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று அவர் கூறினார்.

ரஜினியை வைத்து முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட படங்களை மகேந்திரன் இயக்கியுள்ளார்.

.