ரிஷி கபூரின் மறைவுக்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஹைலைட்ஸ்
- மும்பையில் சந்தன்வாடி மயானத்தில் ரிஷி கபூரின் இறுதி சடங்கு நடந்தது
- 2 ஆண்டுகளாக புற்று நோயால் ரிஷி கபூர் அவதிப்பட்டு வந்தார்
- நேற்று இர்பான் கான், இன்று ரிஷிகபூர் மறைவால் பாலிவுட் சோகத்தில் மூழ்கியது
New Delhi: மறைந்த பழம்பெரும் நடிகர் ரிஷி கபூரின் இறுதிச் சடங்கில் அவரது குடும்ப உறுப்பினர்கள், தொழில் அதிபர் அனில் அம்பானி, பிரபல நடிகர்கள் அபிஷேக் பச்சன், ஆலியா பட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த ரிஷி கபூர் மும்பை எச்.எம். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து இன்று மதியம் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.
இதில் அவரது குடும்பத்தை சேர்ந்த கரீனா கபூர், அவரது கணவர் சைஃப் அலி கான், அர்மான், ஆதார் ஜெய்ன், நடிகை ஆலியா பட், ரன்பிர் கபூர், அபிஷேக் பச்சன், தொழில் அதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே தந்தையின் இறப்புச் செய்தி கேட்டு ரிஷி கபூரின் மகள் ரிதிமா டெல்லியில் இருந்து 1400 கிலோ மீட்டர் பயணமாக மும்பைக்கு காரில் வந்து கொண்டிருக்கிறார். அவரால் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை.
ரஷி கபூர், சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் தந்தை ராஜ் கபூர், இந்தியாவின் மூத்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர்.
நேற்று பாலிவுட்டின் பிரபல நடிகர் இர்பான் கான் உடல்நலக் குறைவால் காலமானார். இப்படிப்பட்ட சூழலில் ரிஷி கபூரின் மறைவுச் செய்தி பாலிவுட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘பாபி', ‘சாந்தினி' போன்ற பாலிவுட் படங்களுக்காக மிகவும் பிரபலமானவர் ரிஷி கபூர். புற்று நோயால் அவதிப்பட்டு வந்த ரிஷி கபூருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அவர் சிகிச்சை முடிந்து மும்பைக்குத் திரும்பினார். இந்தியா வந்த பிறகு அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், “மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டேன்! 11 மாதங்கள், 11 நாட்கள்! எல்லோருக்கும் நன்றி,” எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் ரிஷி கபூர் உடல்நலக் குறைவால் இரண்டு முறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டெல்லியில் ஒரு முறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிறகு கபூர், “பிரியமுள்ள குடும்பமே, நண்பர்களே, எதிரிகளே மற்றும் பின் தொடர்பவர்களே. என் ஆரோக்கியம் குறித்து நீங்கள் கவலைப்பட்டது நெகிழ்ச்சியளிக்கிறது. நன்றி. கடந்த 18 நாட்களாக நான் டெல்லியில் ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்தேன். இங்குள்ள கடும் மாசுவினால் எனக்குத் தொற்று ஏற்பட்டது. அதனால்தான் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்,” என்று தகவல் கொடுத்தார்.
ரிஷி கபூருக்கு நீத்து கபூர் என்னும் மனைவி இருக்கிறார். மேலும் அவருக்கு மகன் ரன்பீர் மற்றும் மகள் ரித்திமா உள்ளனர். கடைசியாக அவர் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘தி பாடி' மற்றும் ‘ஜூந்தா கஹின் கா' என்னும் படங்களில் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் வெளியான ‘தி இன்டெர்ன்' படத்தின் இந்தி ரீமேக்கில் ரிஷி கபூர் நடிக்கவிருந்தார். அவருடன் தீபிகா படுகோன் நடிக்க ஆயத்தமாகியிருந்தார்.
இந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட ஆளுமைகளின் இழப்பால் பாலிவுட் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.