This Article is From Sep 07, 2018

எரிபொருள் விலை கிடு கிடு உயர்வு… மத்திய அரசை கை காட்டும் தமிழக அரசு!

ஒரு லிட்டர் டீசலுக்கு 18 ரூபாய் வீதம் மத்திய கலால் வரி விதிக்கப்படுகிறது. அதை பாதியாக்கினாலே பெரும் சுமை விலகும்.

எரிபொருள் விலை கிடு கிடு உயர்வு… மத்திய அரசை கை காட்டும் தமிழக அரசு!

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றுக் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜெயக்குமார், ‘மத்திய அரசு பல்வேறு வழிகளில் வரி வசூலிக்கிறது. அதற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க வரி குறைப்பு செய்வது கடினமான விஷயம் கிடையாது. ஒரு லிட்டர் டீசலுக்கு 18 ரூபாய் வீதம் மத்திய கலால் வரி விதிக்கப்படுகிறது. அதை பாதியாக்கினாலே பெரும் சுமை விலகும். இது தமிழக அரசின் வேண்டுகோளும் கூட’ என்று தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து, ‘தமிழக அரசு 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பின் விவரங்களை அலசி ஆராய்ந்த பின்னர் தான் இது குறித்து முடிவெடுக்க முடியும்’ என்று கூறினார்.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 83.13 ரூபாய்க்கும் டீசல் 76.17 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த கிடு கிடு விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் வரும் 10 ஆம் தேதி தேசிய அளவிலான பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.