குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் பாதுகாப்பு படை தளபதிகளும் அடங்குவர்.
New Delhi: அரசியல் ஆதயத்திற்காக ராணுவத்தின் செயல்பாடுகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 150க்கும் அதிகமான முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அதில், எல்லைத் தாண்டிய ராணுவத்தின் தாக்குதல்களுக்கு சில அரசியல் தலைவர்கள் தங்களது பெயர்களை பயன்படுத்திக்கொள்வது என்பது அசாதாரணமான மற்றும் முற்றிலும் ஏற்றக்கொள்ள முடியாத செயல் என 156 முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கடிதம் எழுதியதில் 3 முன்னாள் ராணுவத் தளபதி எஸ்.எப் ரோட்ரிக்ஸ், சங்கர்ராய் சவுத்ரி, ஜெனரல் தீபக் கபூர், விமானப்படை மார்ஷல் என்.சி. சூரி. 4 கப்பற்படை முன்னாள் தளபதி லக்ஷ்மி நாராயண் ராம்தாஸ், விஷ்ணு பகவத், அட்மிரல் அருண் பிரகாஷ், அட்மிரல் சுரேஷ் மேத்தா ஆகியோர் எழுதியுள்ளனர்.
இந்தியாவின் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியாக, உங்கள் கவனத்துக்காக நாங்கள் இந்த கடிதத்தை எழுதுகிறோம், எங்களது படைகளில் பணிகளில் உள்ளவர்கள் இடையிலும் ஓய்வுபெற்றவர்கள் இடையிலும் பெரும் அச்சம் மற்றும் கவலைகள் ஏற்பட்டுள்ளது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில், உத்தர பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், ராணுவத்தை 'பிரதமர் நரேந்திர மோடியின் படை' என கூறியிருந்தார். இதற்காக தேர்தல் ஆணையம் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
மேலும், அவர்கள் ராணுவ உடையணிந்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட புகைப்படங்கள், ராணுவ வீரர்களின் புகைப்படங்கள், இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் புகைப்படங்கள், அடங்கிய பதாகைகள், போஸ்டர்கள் உள்ளிட்ட புகைப்படங்களை மேற்கோள் காட்டியும் குற்றம்சாட்டினர்
அதுமட்டுமல்லாமல், மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, முதன்முதலாக வாக்களிக்கும் இளைஞர்கள், பாலக்கோட் தாக்குதல் நடத்திய அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விமானப்படையின் செயலை அரசியல் நோக்கத்துக்கு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணையமும் விசாரித்து வருகிறது.
இப்படி, அரசியல் கட்சிகள், தலைவர்கள் இதுபோன்று ராணுவத்தின் பெயர்களை, செயல்களை தங்களின் அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துவது எப்போதும் இல்லாதது, இது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இதுபோன்று அரசியல்வாதிகளின் செயல்கள், பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள், வீராங்கனைகளின் பணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆதலால், மதச்சார்பற்று, அரசியல்சார்பற்று தேசத்துக்காக பணியாற்றி வரும் ராணுவ வீரர்களின் செயல்களை பாதுகாக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.