விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடியான தாதா மணி என்கிற மணிகண்டனை சென்னையில் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரவுடி மணிகண்டன் மீது 7 கொலை, 9 கொலை முயற்சி, 4 கடத்தல் மற்றும் கொள்ளை, வழிப்பறி, உள்ளிட்ட 28 வழக்குகள் உள்ளன. அதில் ஆரோவில் காவல் நிலையத்தில் மட்டும் 20 வழக்குகள் உள்ளன.
பல்வேறு வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த மணிகண்டனை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ரவுடி மணிகண்டனை பிடிக்க விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவுப்படி, ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு, மற்றும் எஸ்ஐ பிரகாஷ், பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் மணி சென்னை கொரட்டூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, மணிகண்டனை பிடிக்க விழுப்புரம் போலீஸார் விரைந்தனர்.
அப்போது, பிடிக்க சென்ற இடத்தில், ஆரோவில் எஸ்.ஐ. பிரபு என்பவரை ரவுடி மணி கத்தியால் தாக்கியதாக தெரிகிறது. இதனால் போலீஸார் ரவுடி மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டு என்கவுன்டர் செய்தனர்.
ரவுடி மணிகண்டன் மற்றும் ரவுடி பூபாலன் இடையேயான மோதலில் இதுவரை 21 கொலைகள் நடந்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.