ரவுடி சங்கரை போலீசார் 3 முறை சுட்டுள்ளனர்.. காவல் ஆணையர் விளக்கம்!
சென்னையில் ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் மகேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி சங்கர் சென்னை கீழ்பாக்கத்தை அடுத்த நீயூ அவன்யூ சாலையில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் இன்று காலை அங்கு சென்றுள்ளனர்.
அப்போது, ரவுடி சங்கர் இருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். தொடர்ந்து, சங்கரை போலீசார் கைது செய்ய முயன்றபோது, காவலர் முபாரக் என்பவரை ரவுடி சங்கர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து, போலீசாரை பாதுகாக்க ரவுடி சங்கரை ஆய்வாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ரவுடி சங்கரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். எனினும், மருத்துவமனை செல்லும் வழியிலே சங்கர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, ரவுடி சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் முபாரக் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அயனாவரம் என்கவுண்டர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது, குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி சங்கர், அயனாவரம் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு காவல் அதிகாரிகள் விரைந்த நிலையில், காவல் அதிகாரியிடம் இருந்து தப்பிக்க சங்கர் முயற்சி செய்துள்ளார். இதற்காக காவல் அதிகாரி முபாரக் என்பவரை அரிவாளால் வெட்டியுள்ளார்.
அரிவாளை கீழே போடக்கூறி காவல் துறையினர் எச்சரித்தனர். ஆனால், அவர் தொடர்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்டதால், வேறு வழியின்றி காவல் துறையினர் என்கவுண்டர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. காவலர் முபாரக் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன, 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ள நிலையில் 9 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் ஆவார். அவரை கைது செய்வதற்கு 5 பிடிவாரண்டுகள் உள்ளன. தற்போது அவர் கஞ்சா விற்பனை வழக்கிற்காக கைது செய்ய சென்றபோது என்கவுண்டனர் நிகழ்ந்துள்ளது. அவர் மீது மூன்று குண்டுகள் பாய்ந்துள்ளது.
இந்த என்கவுண்டனர் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னையில் தலைமறைவான ரவுடிகள் தேடி கைது செய்யப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.