தமிழகத்தில் கடந்த 15ஆம் தேதி கரையை கடந்த கஜா புயல் நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் 60–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.
புயல் பாதிப்பால் பல இடங்களில் வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன. வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சார கம்பங்களும் விழுந்து கிடக்கிறது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு மற்றும் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் இன்று அறிக்கை மனு தாக்கல் செய்தது. அதில் கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 63 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
பாதிப்படைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்கிறது. புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு உதவி கலெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நிவாரண பணிகளுக்கு ரூ.1,401 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.