This Article is From Dec 22, 2019

மங்களூரு போராட்டம்: உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: எடியூரப்பா

போலீசார் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஜலீல் (43), நவ்ஷீன் (49) உள்ளிட்ட 2 பேர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

மங்களூரு போராட்டம்: உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: எடியூரப்பா

கர்நாடக மாநிலம் மங்களூரில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Bengaluru:

கர்நாடகத்தின் மங்களூருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு கடந்த வாரம் கொண்டு வந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த சட்டத் திருத்தத்தில் கையெழுத்திட்டு சட்டம் அமலுக்கும் வந்தது. 

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் போலீசாரிடையே வன்முறை ஏற்பட்டு வருகிறது. 

அந்தவகையில், கர்நாடக மாநிலம் மங்களூரில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை போலீசார் கலைக்க முயன்ற போது, அது வன்முறையாக வெடித்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

போலீசார் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஜலீல் (43), நவ்ஷீன் (49) உள்ளிட்ட 2 பேர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இதனிடையே, போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் உயிரிழந்தவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர். 

இந்நிலையில், மங்களூருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டுக்கு முன்பு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து மதத் துன்புறுத்தல்கள் காரணமாக இந்தியாவுக்குள் தப்பியோடி வந்த முஸ்லிம் அல்லாத இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தகள் மற்றும் பார்சி சமூகங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முற்படும் இந்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பெரிய அளவிலான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

.