This Article is From Jan 09, 2020

பெண்ணை மீட்க முயன்று உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!

திருவள்ளூரில் ஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்ற முயற்சித்த இளைஞர்களுக்கு முதல்வர் பாராட்டையும் தெரிவித்தார். 

பெண்ணை மீட்க முயன்று உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!

திருவள்ளூரில் ஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்ணை மீட்க முயன்று உயிரிழந்த இளைஞர் யாகேஷ் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். 

திருவள்ளூர் அடுத்த மப்பேடு கூட்டுச்சாலையில், போலீஸ் நிலையம் அருகே கடந்த 26ம் தேதி இரவு 29 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி நரசிங்கபுரம் செல்ல வேண்டுமென கூறியுள்ளார். ஆட்டோ டிரைவரும் அந்த இளம்பெண்ணை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டார். அப்போது ஆட்டோவில் ஏற்கனவே நான்கு வாலிபர்கள் இருந்தனர். 

ஆனால் ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல், கொண்டஞ்சேரி பகுதியிலிருந்து கடம்பத்துார் செல்லும் சாலையில் வேகமாக சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் ஆட்டோவை நிறுத்துமாறு கூச்சலிட்டார்.

ஆனால், ஆட்டோ நிறுத்தாமல் ஓட்டுநர் வேகமாக சென்றார். இதையடுத்து, அந்த இளம்பெண்ணின் அலறலை கேட்டு, கொண்டஞ்சேரி பகுதியில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த இளைஞர்கள் யாகேஷ், ஈஸ்டர், வினித், துரைராஜ் மற்றும் சார்லி ஆகியோர், தங்களது பைக்குகளில் ஆட்டோவை விரட்டி சென்றனர். 

இந்நிலையில் ஆட்டோவில் இருந்த இளம்பெண் சாலையில் குதித்தார். இதையடுத்து ஆட்டோ நிற்காமல் சென்றது. இதையடுத்து இரு பைக்குகளில் சென்ற இளைஞர்கள் ஆட்டோவை முந்தி நிறுத்த முயன்றனர். ஆனால், ஆட்டோவை ஓட்டிச்சென்றவர் வாலிபர்களின் பைக்குகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். இதில், பைக்கில் இருந்து விழுந்த தியாகராஜன் மகன் யாகேஷ்(22) இறந்தார். மேலும் இந்த விபத்தில் பிராங்கிளினுக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது.

இந்நிலையில், திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற பைக்கில் சென்று விபத்தில் உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் திருவள்ளூரில் ஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்ற முயற்சித்த இளைஞர்களுக்கு முதல்வர் பாராட்டையும் தெரிவித்தார். 

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த பிராங்கிளினுக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலவர் பேரவையில் ஆணையிட்டுள்ளார். மேலும் 3 இளைஞர்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவியும் முதல்வர் அறிவித்துள்ளார்.
 

.