பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
ஹைலைட்ஸ்
- காவலர் அருண் காந்தி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சாலையிலே மயங்கி விழந்தார்
- பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
- அவரது குடும்பத்தில் தகுதியான நபர் ஒருவருக்கு அரசு பணி
பணியின்போது மரணம் அடைந்த போக்குவரத்து காவலர் அருண்காந்தி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து காவலராக இருந்தவர் அருண்காந்தி. இவர் நேற்று வழக்கம்போல் சாந்தோம் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சாலையிலே மயங்கி விழந்துள்ளார்.
இதையடுத்து, சக காவலர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனாக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், காவல் துறையினர் இரவு, பகல் பாராமல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பணியின்போது மரணம் அடைந்த காவலர் அருண்காந்தி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, சென்னையில் பணியின்போது மரணம் அடைந்த காவலர் அருண்காந்தி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும். அவரது குடும்பத்தில் தகுதியான நபர் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றார்.
மேலும், களப்பணியாற்றும் அலுவலர்கள் உயிரிழந்து விட்டால் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் சோதனை காலத்திலும் அரசு பணியாளர்கள் சிறப்புடன் செயல்படுகின்றன என்று அவர் கூறினார்.