ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்
இனி ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.100லிருந்து, ரூ.1000ஆக அபராதம் விதிகப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாலை விபத்துக்கள் தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்திருத்தத்தில், தற்போது உள்ள அபராதத்தை விட பன்மடங்கு அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த மோட்டார் வாகன திருத்த மசோதாவை மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து, இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தின்படி, சாலை விதிமீறினால் குறைந்தபட்ச அபாரதம் ரூ.500 ஆக உயர்த்தப்படும். தற்போதுள்ள விதிமீறல் அபாரதத் தொகை 10 மடங்கு அதிகரிக்கும். 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால், அவ்வாகனத்தின் உரிமையாளர் அல்லது பாதுகாவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன் 3 ஆண்டு சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்
அதில் முதல்கட்டமாக, ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாவிட்டால் தற்போது நூறு ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அந்த அபராதத்தொகை உயர்த்தப்பட்டு ஆயிரம் ரூபாய் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனம் ஓட்டுபர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போதும், அருகில் உள்ள கடைகளுக்குச் செல்லும் போதும் ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியமில்லை என்று சிலர் தவறாக நினைத்துக் கொண்டிருப்பதாகக் கூறும் போக்குவரத்து காவல் துறையினர், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.