தமிழகத்தில் நடந்து வரும் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள் கடந்த செவ்வாயன்று சென்னை வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்கள்.
தொடர்ந்து நேற்று 2வது நாளாக முக்கிய துறைகளின் அதிகாரிகள் மற்றும் தேர்தல் தொடர்பான அதிகாரிகளை அழைத்து பேசினார்கள். இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் அசோக் லவாசாவும், சுஷில் சந்திராவும் கூறியதாவது, தேர்தலில் ஆள்பலம், பண பலம் ஆதிக்கம் செலுத்துவது சவாலாக இருக்கிறது. இப்போது ஆள் பலம் குறைந்து பணபலம் அதிகரித்திருக்கிறது.
தமிழகத்தில் ரூ.127 கோடி அளவுக்கு பணம் பிடிபட்டு உள்ளது. இது முந்தைய தேர்தல்களைவிட மிகமிக அதிகம்தான். இதனால் மிக கடுமையான நடவடிக்கைகள், கண்காணிப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் சம்பந்தப்பட்டவர்களை தேர்தல் ஆணையம் தண்டிப்பதில்லை. ஆதாரங்களை கண்டுபிடிப்பது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வரிசைப்படுத்தி இணைப்பது மற்றும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கத்தான் அந்த குற்றங்கள் நடத்தப்பட்டன என்பதையெல்லாம் நிரூபிக்க வேண்டியது விசாரணை முகமைகள்தான்.
பணபலத்தை தடுக்க தீவிரமான, ஒளிவுமறைவற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதுபற்றி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். மதுபாட்டில்கள், இலவச பரிசுப்பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவை வழங்குவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
அமமுக ஏற்கனவே வைத்திருந்த குக்கர் சின்னம், தற்போது சில தொகுதிகளில் போட்டியிடும் அந்த கட்சியின் வேட்பாளர் பெயரைக் கொண்ட சுயேச்சை வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டு இருப்பது ஆளும் கட்சிக்கு தேர்தல் கமிஷன் ஆதரவு தெரிவிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதாக கூறுகிறீர்கள்.
தேர்தல் சின்னம் பற்றிய உத்தரவை பின்பற்றியும், அதற்கான சட்டங்களின்படியும்தான் தேர்தல் கமிஷன் செயல்பட்டுள்ளது. மக்களுக்கு அது பல்வேறு தோற்றங்களையும், கருத்துகளையும் அளிக்கலாம். அதுபற்றி இங்கு விவாதிக்க முடியாது என்று அவர்கள் கூறினார்கள்.