கடந்த 16ம் தேதி கரையை கடந்த கஜா புயல் நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் 60–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.
புயல் பாதிப்பால் பல இடங்களில் வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன. வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சார கம்பங்களும் விழுந்து கிடக்கிறது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு மற்றும் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மின்சார கட்டமைப்புகள் 24,941 பணியாளர்களை கொண்டு போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் சுகாதாரத்தை பேணுவதற்காக சிறப்பு மருத்துவ குழுக்கள் முகாமிட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், கஜா புயல் பாதிப்பிற்காக, பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 நன்கொடை வழங்கியுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கஜா புயல் நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 13 கோடி ரூபாய் திரண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.