புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை - முதல்வர்
ஹைலைட்ஸ்
- புதுச்சேரியல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை
- இந்த பணமானது விரைவில் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்
- 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.2,000 நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 11 பேர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்றிரவு 8 மணி அளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 2 நாட்களாக நாட்டின் பெரும்பான்மையான இடங்கள் முடக்கப்பட்டுள்ளன. நாட்டைக் காக்க நள்ளிரவு 12 மணி முதல் ஒட்டுமொத்த இந்தியாவே முடக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசங்களும் முடக்கப்பட்டிருக்கும். கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்றால் இந்த கடுமையான நடவடிக்கை மிக அவசியம்.
இந்த தேசிய ஊரடங்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாட்டின் ஒவ்வொரு குடிமக்களின் உயிர்கள் எனக்கு முக்கியமானது. எனவே நீங்கள் நாட்டின் எந்தப் பக்கத்திலிருந்தாலும் நடமாட்டத்தைத் தவிர்த்துக் கொள்ளவும். அடுத்து வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு இருக்கும். இந்த 21 நாட்களை நாம் சமாளிக்காவிட்டால் பல குடும்பங்கள் அழிந்து விடும். 21 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு உத்தரவால், தினக் கூலிகள், விவசாயக் கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர்கள் உள்ளிட்ட பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியதாவது, கொரோனா தடுப்பு நடவடிக்கையால் அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், விவசாயிகள், மீனவர்கள், கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வேலையிழந்துள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த பணமானது விரைவில் அவரவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். 3 லட்சத்து 44 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவித் தொகை வழங்குவதன் மூலம் அரசுக்கு, 68 கோடியே 88 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலவாகும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறும்போது, புதுச்சேரி அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனை அளிக்கப்படும். மேலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.