This Article is From Apr 09, 2019

ரூ.281 கோடி வரை கணக்கில் வராத பணம் பற்றிய தகவல்; ம.பி ஐடி ரெய்டின் பகீர் பின்னணி!

IT Raids in MP: வருமான வரித் துறையை மத்திய அரசு, அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி வருகிறது என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது

Raid in MP: சென்ற வாரம் வருமான வரித் துறையினர் (Income Tax Department) கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்- மஜத கூட்டணிக் கட்சியினருக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் ரெய்டு நடத்தினர்.

New Delhi:

IT Raids in MP: மத்திய பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் 281 கோடி ரூபாய் வரை கணக்கில் வராத பணம் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மத்திய பிரதேசத்திலிருந்து ஒரு பகுதி பணம், டெல்லியில் இருக்கும் முக்கிய அரசியல் கட்சிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுளது. இந்த ரெய்டில், கணக்கில் வராத 14.6 கோடி ரூபாய், 252 மதுபான பாட்டில்கள் மற்றும் சில வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் பணப் பரிமாற்றம் குறித்து தகவல் எழுதி வைக்கப்பட்டிருந்த டயரி, கணினி கோப்புகளும் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 230 கோடி ரூபாய் வரை பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இதில் 80 நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக் கிழமை, ஹவாலா வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறி, வருமான வரித் துறையினர், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் முன்னாள் தனி செயலாளர் பிரவீன் காக்கர் மற்றும் அவரது ஆலோசகர் ராஜேந்திர குமார் மிக்லானி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தினர். 

சென்ற வாரம் வருமான வரித் துறையினர் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்- மஜத கூட்டணிக் கட்சியினருக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் ரெய்டு நடத்தினர். இந்த ஐடி ரெய்டை, அம்மாநில முதல்வர் குமாரசாமி, ‘அரசு அமைப்புகளை மத்திய அரசு தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தி வருகிறது' என்று விமர்சனம் செய்தார். 

வருமான வரித் துறையை மத்திய அரசு, அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி வருகிறது என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையம், ‘வருமான வரித் துறை நடத்தும் சோதனைகள் எந்தவித பாரபட்சமும் இன்றி இருந்திட வேண்டும். ரெய்டு நடத்தப் போவதென்றால், தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்' என்று சுற்றறிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

.