This Article is From Nov 30, 2018

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,500 : காங். தேர்தல் அறிக்கை

விவசாயிகள் கடன் தள்ளுபடி,வேலையில்லா இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்குவது என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

ராஜஸ்தானில் தேர்தல் அறிக்கையை கட்சியின் மாநில தலைவரான சச்சின் பைலட் வெளியிட்டுள்ளார்.

Jaipur:

ராஜஸ்தானில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது. இதில் விவசாயிகள் கடன் தள்ளுபடி, வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவது  உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,500 உதவித்தொகையாக வழங்கப்படும், பெண்களுக்கு இலவச கல்வி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும், பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டம் ஏற்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த அடுத்த 30 நாட்களில் ஏற்படுத்தி தரப்படும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் வாக்குறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், அடுத்த 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. ஏற்கனவே 15 லட்சம்பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்து விட்டதாக கூறியுள்ளனர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை பாஜகதான் காட்ட வேண்டும் என்று விமர்சித்துள்ளார்.

.