Bengaluru: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான பரமேஸ்வராவுக்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத சுமார் ரூ.4 கோடி அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பரமேஸ்வராவின் தம்பி மகனின் வீடு, ஆனந்த் மற்றும் சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக காங்கிரஸ் தலைவருடன் தொடர்புடைய அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரி குழுமங்களில் முறைகேடுகள் நடந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. இந்த குழுமங்களில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கைகாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பரமேஸ்வரா அளித்த பேட்டியில், இந்த சோதனை குறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது. அவர்கள் எங்கு சோதனை நடத்துகின்றனர் என்பதும் எனக்கும் தெரியாது. அவர்கள் சோதனை செய்யட்டும், அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அப்படி எங்களது தரப்பில் ஏதேனும் தவறுகள் இருந்தால், நாங்கள் அதனை சரி செய்ய தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.