This Article is From May 08, 2020

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

ரூ.50 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

ஹைலைட்ஸ்

  • விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி
  • கண்டெய்னர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே காவலர் உயிரிழந்தார்.
  • குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி

ஓசூரில் கொரோனா தடுப்புக்காக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் பணியில் ஈடுப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்துள்ள கிருக்கன்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (54) இவர் ஒய்வு பெற்ற இராணுவவீரர். தற்போது ஒசூர் போக்குவரத்து துறையில் ஒசூரில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாகவே ஒசூர் அருகே மாநில எல்லைப்பகுதியான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் இவர் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

அதிகாலையில் சோதனைச்சாவடி அருகே சென்னையிலிருந்து அகமதாபாத்திற்குச் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது, பின்னால் வந்த டிப்பர் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி அங்கிருந்த தடுப்பின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. அப்போது தடுப்பின் மறுபுறம் நின்றுகொண்டிருந்த தலைமைக் காவலர் சேட்டு மீது கண்டெய்னர் லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் தலை நசுங்கி பலியானார்.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த காவலர் சேட்டுவிற்கு சந்திரா என்ற மனைவியும் 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த விபத்து குறித்து ஒசூர் சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த காவலர் சேட்டு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி கூறியதாவது, லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் சேட்டு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தலைமைக் காவலர் சேட்டை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

.