இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்
திமுக ஆட்சியின்போது புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011-ல் விசாரணை கமிஷன் அமைத்தார்.
ரகுபதி கமிஷனின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ரகுபதி கமிஷனின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
அதேநேரத்தில், ரகுபதி கமிஷன் சேகரித்த ஆவணங்களை விசாரித்த நீதிமன்றம், தேவை ஏற்பட்டால் விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றலாம் என உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இந்த விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு தடை இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் ரூ. 629 கோடி வரைக்கும் முறைகேடு நடந்திருக்கிறது. எனவே இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
மனுதாரர் தரப்பில், ரகுபகி கமிஷனின் ஆவணங்களை முழுமையாக விசாரிக்காமல் லஞ்ச ஒழிப்புத் துறையை விசாரிக்க உத்தரவிடப்பட்டது சட்ட விரோதம் என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.