ரூ. 90 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பாக தமிழகத்தில் 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
விருதுநகர், மதுரை மற்றும் கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இந்துமதி ரிபைனரி பிரைவேட் லிமிடெட். நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆர். சென்பகன் உள்ளிட்டோரது வீடுகள் மற்றும் வணிக வளாகங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை தனது புகாரில், “இந்துமதி ரிபைனரி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் (ஐ.ஆர்.பி.எல்.)போலி ஆவணங்களை ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.) அளித்து ரூ. 87.36 கோடி அளவுக்கு கடன் பெற்றுள்ளது. போலி ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் போதுமான தொகை இல்லை. இதனால் இந்துமதி ரிபைனரி வாங்கிய மொத்த கடனும் எஸ்.பி.ஐ. வங்கி மீது விழுந்துள்ளது. அந்த வகையில் மொத்தம் 90 கோடி ரூபாய் அளவுக்கு எஸ்.பி.ஐ. வங்கிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விவகாரத்தில் சிபிஐ அளித்துள்ள முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் ஆர். செண்பகன் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.