RS Bharathi Controversy: "ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் நீதிபதிகளாக இருக்கிறார்கள். அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை”
RS Bharathi Controversy: தி.மு.க.வின் அமைப்புச் செயலாளராக இருக்கும் ஆர்.எஸ்.பாரதி, சமீபத்தில் கட்சி நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர்கள், ஊடகங்கள் மற்றும் நீதிமன்றத்தைப் பற்றிப் பேசியுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
தி.மு.க ஒருங்கிணைத்த கட்சிக் கூட்டத்தில் பேசிய பாரதி, “இந்த நாட்டிற்குள் எவன் எவனோ நுழைந்துவிட்டு, நாய்கள், பேய்கள் எல்லாம் பேசத் துவிங்கிவிட்டன. எச்.ராஜா போன்ற ஆட்களெல்லாம் வாய் கிழியப் பேசுகிறார்கள்.
வட இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து மாநிலத்தவர்களும் முட்டாள்களாகவே இருக்கிறார்கள். அறிவே கிடையாது. ஹரிஜன் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட ஐகோர்ட் நீதிபதியாக இல்லை. இன்று வரை ஒருவர் கூட உயர் நீதிமன்ற நீதிபதியாக இல்லை. ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் நீதிபதிகளாக இருக்கிறார்கள். அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று சர்ச்சையாகப் பேசினார்.
தொடர்ந்து ஊடகங்கள் பற்றிப் பேசிய பாரதி, “தொலைக்காட்சி ஊடகங்கள் போல அயோக்கியர்கள் உலகத்தில் எவரும் கிடையாது. வெளிப்படையாகச் சொல்கிறேன். பம்பாயில் இருக்கும் ரெட் லைட் ஏரியா போன்று நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். காசு வருகிறது என்கிற காரணத்திற்காக எதை வேண்டுமானாலும் தலைப்பாக வைக்கிறார்கள்,” என்று விமர்சனம் செய்தார்.
அவர் இப்படிப் பேசியதைத் தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க.வை சாடி வருகின்றன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் பாரதியின் பேச்சுக்குப் பெரியதாக எதிர்வினையாற்றவில்லை. அதே நேரத்தில் ஊடகங்கள் பற்றி அவதூறாகப் பேசியதற்கு மன்னிப்பு கோரியுள்ளார் ஆர்.எஸ்.பாரதி.