This Article is From May 23, 2020

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது!

கைது செய்ததைத் தொடர்ந்து, சென்னை ஆணையர் அலுவலகத்தில் வைத்து ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தினர். 

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது!

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சர்ச்சையாக பேசினார் ஆர்.எஸ்.பாரதி

ஹைலைட்ஸ்

  • இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார் ஆர்.எஸ்.பாரதி
  • வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்
  • ஆர்.எஸ்.பாரதியின் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

சென்னை, ஆலந்தூரில் உள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் இன்று அதிகாலை சென்ற தமிழக போலீசார், அவரை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்காலப் பிணை கொடுத்துள்ளது நீதிமன்றம்.

கைது செய்ததைத் தொடர்ந்து, சென்னை ஆணையர் அலுவலகத்தில் வைத்து ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தினர். 

இதனிடையே, தன் மீதான கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ் பாரதி, ‘கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நான் பேசியதாக சமூகவலைதளங்களில் திரிக்கப்பட்டு செய்திகள் வெளியிடப்பட்டன. அதற்கு அடுத்த நாளே ஊடகங்களுக்கு முன் அதற்கு பதில் கூறினேன். ஏறத்தாழ 100 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், இன்று அதிகாலையில் கைது செய்ய வேண்டும் என்று வந்திருக்கிறார்கள். 

அதற்கு காரணம் நேற்று மாலையில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் செய்துள்ள ஊழல் குறித்து புகார் அளித்துள்ளேன். தற்போது கூட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து ஒரு புகார் தயார் செய்து கொண்டு இருக்கிறோம். அதனை உளவுத்துறை மூலம் எப்படியோ தெரிந்துக்கொண்டு என்னை கைது செய்துள்ளனர். சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடாது. என் பின்னால் வழக்கறிஞர் அணி உள்ளது. நான் சிறையில் இருந்தாலும், நாளைய தினம் நிச்சயம் எஸ்.பி.வேலுமணி மீது புகார் மனு அளிக்கப்படும். 

கொரோனா சூழலில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக கூறியும் என் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்காக நான் பரிதாபப்படுகிறேன். யாரையோ திருப்திப்படுத்த இந்த அதிகாரிகளை பயன்படுத்தி என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே அதிகாரிகள் இன்னும் சில மாதங்களில் எங்களுக்கு பாதுகாப்பாக வருவார்கள். இதையெல்லாம் ஐந்து முறை பார்த்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள்' என்று கூறினார்.

ஆர்.எஸ்.பாரதியின் கைதுக்கு எதிராக எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. மாஜிஸ்திரேட் நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் இடைக்கால பிணை கொடுத்து உத்தரவிட்டது. 


 

.