ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் வல்சன், இருமுடி கட்டு இல்லாமல் 18 படியில் நிற்கும் காட்சி
Sabarimala, Kerala: சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயில் நேற்று மாலை மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணி முதல் இன்று இரவு 10.30 வரை சிறப்பு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் இன்று காலை இள வயது பெண் ஒருவர் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அங்கு வலதுசாரி போராட்டக்காரர்கள் சலசலப்பில் ஈடுபட்டனர்.
இந்த சலசலப்பின் போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரு நபர், சபரிமலையில் பின்பற்றி வரும் ஒரு ஐதீகத்தை மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சபரிமலையில் இருக்கும் 18 படிகளில், பக்தர்கள் இருமுடி கட்டியபடிதான் ஏற வேண்டும் என்றும், 18 படியின் பாதி தூரத்திலிருந்து இறங்கி வரக் கூடாது என்றும் ஐதீகம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், இள வயது பெண் ஐயப்பன் கோயிலுக்குள் சென்றதாக கூறி மோதல் போக்கு உருவான போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த வல்சன் தில்லன்கேனி என்ற நபர் மேற்குறிப்பிட்ட இரண்டு ஐதீகத்தையும் மீறியுள்ளதாக கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றம் சமீபத்தில், சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்லக் கூடாது என்றிருந்த தடையை விலக்கியது. அனைத்து வயதுப் பெண்களும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
சனிக்கிழமை முதல், சபரிமலை கோயிலைச் சுற்றி, 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. பாதுகாப்பு கருதியும், பக்தர்களின் நலன் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, கடந்த மாதம் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, பல பெண்கள் மற்றும் செயற்பாட்டளர்கள் ஆலயத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால், சபரிமலையில் குவிந்திருந்த வலதுசாரி போராட்டக்காரர்களால் அவர்கள் தொடர்ந்து விரட்டியடிக்கப்பட்டனர். இதனால் சென்ற முறை நடை திறக்கப்பட்ட போது ஒரு இள வயது பெண் கூட கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.
இந்நிலையில் இன்று காலை இள வயது பெண் ஒருவர், கோயிலுக்குள் நுழைந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதையடுத்து போராட்டக்காரர்கள் போலீஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீஸ் விசாரணையில், கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்த பெண்ணுக்கு வயது 52 என்றும், அதனால் தான் அவர் அனுமதிக்கப்படார் என்றும் தெரியவந்தது. இந்த சலசலப்பின் போது தான், வல்சன் பாரம்பரியத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.