ஆர்டிஐ சட்டத்தை 60லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர் என சோனியா தகவல்.
New Delhi: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு இடைஞ்சலாக பார்க்கிறது என சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஆர்.டி.ஐ. திருத்த மசோதா நேற்று மாலை நிறைவேறியது. இதனையடுத்து இந்த சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பப்படவுள்ளது.
மாநிலங்களவையில் மத்திய அரசிற்கு போதிய பலம் இல்லாததால் அங்கு இந்த மசோதா நிறைவேறுவது சற்று கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஆர்டிஐ திருத்த மசோதா என்று அழைப்பதற்கு பதிலாக நீக்க மசோதா என்றே அழைக்கலாம் என எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.
நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு மசோதாவை அனுப்ப வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. மத்திய தகவல் ஆணையரின் பதவிக் காலம், ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக திருத்தம் கொண்டுவருவதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. தற்போது மத்திய தகவல் ஆணையரின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக உள்ளன. இனிமேல் இதனை மத்திய அரசு முடிவு செய்யும் என்று இந்த மசோதா கூறுகிறது.
திருத்த மசோதா ஆர்.டி.ஐ.யின் வலிமையை நீர்த்துப் போகச் செய்யும் என்று செயற்பாட்டார்கள் கூறி வருகின்றனர். ஜனநாயகத்தின் மீது விழுந்த மிகப்பெரும் அடி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆர்டிஐ திருத்த மசோதா மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களின் உரிமையை அரசு பறிக்க முயற்சி செய்வதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தற்போதைய ஆர்டிஐ-யை மத்திய அரசு இடைஞ்சலாக பார்க்கிறது. எனவே தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய கண்காணிப்பு ஆணையத்திற்கு நிகராக உள்ள மத்திய தகவல் ஆணையத்தின் சுதந்திரத்தை பறிக்க அரசு முயற்சிகிறது.
இந்த நோக்கத்திற்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையையும் பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால் அது நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களின் உரிமையை பறிக்கும் விதமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.