This Article is From Jan 04, 2020

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் : அதிமுகவை விட அதிக இடங்களை கைப்பற்றியது திமுக!!

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்றும், இன்றும் என 2 நாட்களாக எண்ணப்பட்டன. இதில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி காணப்பட்டது.

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் : அதிமுகவை விட அதிக இடங்களை கைப்பற்றியது திமுக!!

சிசிடிவி கேமரா மூலமாக வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக விட திமுக அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. தொடர்ந்து, நேற்று இரவு விடிய விடிய வாக்கு எண்ணும் பணி இன்றும் நடைபெற்றது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது. சென்னை மாவட்டம் சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்து இருப்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை.

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு அமல்படுத்துவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை. 

முதல் கட்ட தேர்தலின் போது 76.19 சதவீதம் வாக்குகளும், 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன.  இந்த வாக்குப்பதிவின் போது வாக்குச்சீட்டுகளை மாற்றி வழங்கியது  உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து 9 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 59.42 சதவீதம் வாக்கு பதிவானது.

மொத்தம் 515 மாவட்டக் கவுன்சிலர், 5067 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. மீதம் உள்ள பதவிகள் பஞ்சாயத்து தேர்தலுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.  நேற்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக 270 இடங்களையும், அதிமுக 242 இடங்களையும் கைப்பற்றியது.

இதேபோன்று மொத்தம் உள்ள 5067 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக 2338 இடங்களையும், அதிமுக 2,185 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், 94 இடங்களை கைப்பற்றியது. மற்ற கட்சிகள் 400-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக, திமுக சார்பாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கிடையே, தேர்தல் பணிகள் முற்றிலும் நிறைவு பெறாத காரணத்தால், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த விடுமுறை 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டு ஜனவரி 6-ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

.