This Article is From Jan 02, 2020

ஊரக உள்ளாட்சி தேர்தல்; 27 மாவட்டங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்!

இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக 315 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஊரக உள்ளாட்சி தேர்தல்; 27 மாவட்டங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்!

மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. தொடர்ந்து, மாலையில் தேர்தலின் வெற்றி, தோல்வி குறித்த அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது. சென்னை மாவட்டம் சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்து இருப்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை.

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு அமல்படுத்துவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை. மீதம் உள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடந்தது. 

முதல் கட்ட தேர்தலின் போது 76.19 சதவீதம் வாக்குகளும், 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன.  இந்த வாக்குப்பதிவின் போது வாக்குச்சீட்டுகளை மாற்றி வழங்கியது  உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து 9 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 59.42 சதவீதம் வாக்கு பதிவானது.

இந்நிலையில், இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக 315 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 35 ஆயிரத்திற்கு மேறப்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். தேர்தல் முடிவுகளை https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 

.