This Article is From Sep 04, 2019

ரஷ்யாவும் (Russia) இந்தியாவும் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாது: பிரதமர் (PM) மோடி பேச்சு!

2 நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணத்தை ரஷ்யாவுக்கு மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.

‘இந்திய அரசியல் சாசனத்துக்கு உட்பட்டுதான் காஷ்மீர் விவகாரம் கையாளப்பட்டிருக்கிறது’ என்று ரஷ்ய அரசு தரப்பு கருத்துத் தெரிவித்தது

ஹைலைட்ஸ்

  • ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தது ரஷ்யா
  • இந்தியாவும் ரஷ்யாவும் ஒருவருக்கு ஒருவர் துணை நிற்கும்: மோடி
  • 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி
New Delhi:

ஜம்மூ காஷ்மீர் விஷயம், இந்தியாவின் உள்விவகாரம் என்று மத்திய அரசு தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், தனது ரஷ்ய பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, “ரஷ்யாவும் இந்தியாவும் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் ஒருபோதும் தலையிடாது” என்று பேசியுள்ளார். 

காஷ்மீர் விவகாரம் குறித்து சர்வதேச நாடுகள் சில, தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் அது குறித்து பேசி வருகின்றன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், காஷ்மீர் விவகாரம் குறித்து கவலை தெரிவித்திருந்தார். பிரிட்டன் நாடாளுமன்றம், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடந்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியது. கடந்த மாதம் இந்தியா, ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, 2 யூனியன் பிரதேசங்களாக அதைப் பிரித்தது. 

இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்திருந்தது. ‘இந்திய அரசியல் சாசனத்துக்கு உட்பட்டுதான் காஷ்மீர் விவகாரம் கையாளப்பட்டிருக்கிறது' என்று ரஷ்ய அரசு தரப்பு கருத்துத் தெரிவித்தது. 

ரஷ்ய பயணத்தில் மேலும் பேசிய மோடி, “எப்போது தேவையென்றாலும், எப்போது அவசியம் என்றாலும் ரஷ்யாவுக்காக இந்தியாவும், இந்தியாவுக்காக ரஷ்யாவும் துணை நிற்கும். இரு நாடுகளுக்கும் இடையில் இருப்பது பிராந்திய ரீதியிலான, சர்வதேச ரீதியிலான நட்புறவு மட்டுமல்ல. ஆர்க்டிக், அன்டார்க்டிக் போன்ற இடங்களிலும் நாங்கள் சேர்ந்தே செயல்படுகிறோம்” என்று உரையாற்றினார். 

2 நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணத்தை ரஷ்யாவுக்கு மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. இந்த பயணத்தின்போது, கிழக்கு பொருளாதார ஃபோரம் சந்திப்பிலும் மோடி கலந்து கொள்கிறார். 

இந்த சந்திப்பின்போது இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவு, வர்த்தகம், முதலீடு, எண்ணெய் மற்றும் எரிவாயு, அணு சக்தி, ராணுவம், விண்வெளி மற்றும் கடல்சார் போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 
 

.