This Article is From Aug 21, 2020

ரஷ்யாவின் COVID-19 Vaccine… மருந்து உற்பத்திக்கு இந்தியாவிடம் பேச்சுவார்த்தை!

கமாலேயே ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆர்டிஐஎஃப் மூலம் இந்த கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் COVID-19 Vaccine… மருந்து உற்பத்திக்கு இந்தியாவிடம் பேச்சுவார்த்தை!

இதுவரை இந்த ஸ்பட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்து உள்ளதாக கமாலேயே ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஹைலைட்ஸ்

  • சென்ற வாரம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக ரஷ்யா அறிவிப்பு
  • ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இது குறிதுத அறிவித்தார்
  • மருந்துக்கு 'ஸ்பட்னிக் வி' எனப் பெயரிடப்பட்டுள்ளது
New Delhi:

ரஷ்ய அரசு, சில நாட்களுக்கு முன்னர் உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த மருந்துக்கு ஸ்பட்னிக் வி ( Sputnik V) எனப் பெயரிடப்பட்டது. இந்த மருந்தை கண்டுபிடிக்க, RDIF எனப்படும் ரஷ்ய நேரடி முதலீடு நிதியம்தான் உதவி புரிந்தது.

அந்த அமைப்பின் சிஇஓ, கிரில் திமித்ரியெவ், தற்போது கண்டுபிடித்த மருந்தை அதிகளவு உற்பத்தி செய்ய இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம், ஸ்பட்னிக் வி குறித்து அறிவித்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், “இந்த கொரோனா தடுப்பு மருந்து, மிகச் சிறப்பாக வேலை செய்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியையும் ஊக்குவிக்கிறது” என்று கூறினார். 

கமாலேயே ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆர்டிஐஎஃப் மூலம் இந்த கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த மருந்து, 3 ஆம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அதிகளவிலான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. 

ஸ்பட்னிக் வி பற்றி ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமித்ரியெவ், “தற்போது இந்த கொரோனா தடுப்பு மருந்தின் உற்பத்தி என்பது முக்கியமான விஷயமாக இருக்கிறது. தற்போதைய சூழலில், நாங்கள் அதைச் செய்ய இந்தியாவோடு கூட்டு சேர்ந்து தயாரிக்க திட்டமிட்டு வருகிறோம்.

கமாலேயா தடுப்பு மருந்தை பெருமளவு உற்பத்தி செய்ய அவர்களால் முடியும் என்று நினைக்கிறோம். அதன் மூலம் எங்களுக்கு வந்துள்ள ஆர்டர்களை ஈடுகட்ட முடியும். லத்தீன் அமெரிக்கா, ஆசியாவின் பல நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய முன் வந்துள்ளன” என்றார். 

சர்வதேச ஒத்துழைப்பை நல்கும் திமித்ரியெவ், “நாங்கள் அடுத்தக்கட்ட மருத்துவப் பரிசோதனையை ரஷ்யாவில் மட்டுமல்ல, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் செய்ய உள்ளோம். 5 நாடுகளில் இந்த மருந்தை நாங்கள் உற்பத்தி செய்ய உள்ளோம்.

ஆசியா, லத்தீன் அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இந்த மருந்துக்கு அதிக தேவை உள்ளது” என்று விளக்கினார். 

இதுவரை இந்த ஸ்பட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்து உள்ளதாக கமாலேயே ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 


 

.