Russia Covid Vaccine: "இதுவரை 20 நாடுகளிடமிருந்து சுமார் 1 பில்லியன் டோஸ்களுக்கான ஆர்டர் வந்துள்ளன."
ஹைலைட்ஸ்
- ரஷ்ய அதிபர் புதின், கொரோனா மருந்தை உருவாக்கியதாக சொன்னார்
- தன் மகளுக்கு மருந்து கொடுக்கப்பட்டுள்ளதாக புதின் அறிவித்தார்
- ஸ்பட்னிக் வி என்று அந்த மருந்திற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது
Moscow: உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கி விட்டதாக ரஷ்ய அரசு, இன்று அறிவித்தது. தாங்கள் உருவாக்கிய மருந்திற்கு ‘ஸ்பட்னிக் வி' (Sputnik V) என்று ரஷ்யா பெயர் வைத்துள்ளது.
இந்நிலையில் தடுப்பு மருந்து கண்டுபிடித்த ஆய்வு நிறுவனத்துக்கு நிதி கொடுக்கும் ரஷ்ய நேரடி முதலீடு நிதி அமைப்பின் தலைவர் கிரில் திமித்ரியெவ், “தற்போது நாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்திற்கான 3வது கட்ட பரிசோதனை வரும் புதன் கிழமை முதல் ஆரம்பிக்கப்படும். செப்டம்பர் மாதம் முதல் மருந்தை அதிகளவு உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கமேலியா இன்ஸ்டிட்யூட் அமைப்பு உருவாக்கிய மருந்தை வாங்க பலர் ஆர்வமாக உள்ளனர். இதுவரை 20 நாடுகளிடமிருந்து சுமார் 1 பில்லியன் டோஸ்களுக்கான ஆர்டர் வந்துள்ளன.
எனவே, வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுடன் ஓர் ஆண்டுக்கு 500 மில்லியன் டோஸ்களை உருவாக்க ரஷ்யா தயாராக உள்ளது” என்று கூறினார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்தை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளதை அடுத்து, பல தரப்பினரும் அது குறித்து சந்தேகம் எழுப்பி வருகின்றனர். அது குறித்து திமித்ரியெவ், “எங்கள் கொரோனா தடுப்பு மருந்துக்கு எதிராக ஊடகங்கள் வாயிலாக ஒரு தவறான சித்தரிப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
அப்படிப்பட்ட பிரசாரங்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, எங்களுடன் இணைந்து, சம்பந்தப்பட்ட நாடுகள் தங்களின் குடிமக்களுக்கு, பாதுகாப்பான மற்றும் உயர் தரம் வாய்ந்த கொரோனா தடுப்பு மருந்தை கொடுக்க முன்வர வேண்டும். இதன் மூலம் பல உயிர்களைக் காப்பாற்றி, பெருந்தொற்றுக்கு ஒரு முடிவைக் கொண்டு வரலாம்” என பரிந்துரை செய்துள்ளார்.