“இன்று காலை, உலகில் முதன்முறையாக, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கி பதிவு செய்யப்பட்டுள்ளது"
ஹைலைட்ஸ்
- வீடியோ கான்ஃபரென்சிங் மூலம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் புதின்
- தன் மகளுக்கு மருந்து கொடுக்கப்பட்டுள்ளதாக புதின் அறிவிப்பு
- புதின் அறிவிப்பு குறித்து WHO இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை
Moscow: ரஷ்யா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த புதிய தடுப்பு மருந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்ய அமைச்சர்கள் மத்தியில் வீடியோ கான்ஃபரென்சிங் அழைப்பு மூலம் பேசிய புதின், “இன்று காலை, உலகில் முதன்முறையாக, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கி பதிவு செய்யப்பட்டுள்ளது.
என் மகள்களில் ஒருவர் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டார். கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கும் பரிசோதனையில் அவர் ஈடுபட்டார் என்று சொல்லலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து, அதற்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்க ரஷ்ய அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இந்த மாதத் தொடக்கத்தில், தாங்கள் உருவாக்கி வரும் மருந்தை பெருமளவு உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டுக்குள் பல லட்சம் கொரோ தடுப்பு மருந்து டோஸ்களை உருவாக்க உள்ளதாகவும் கூறியிருந்தது ரஷ்யா.
அதே நேரத்தில் உலக சுகாதார அமைப்பான WHO, ‘ரஷ்யா, கொரோனா தடுப்பு மருந்து உருவாக்குதலில் முறையாக அனைத்துவித விதிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பான மருந்தை உருவாக்க வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தது.
உலகளவில் கொரோனா வைரஸின் அதிவேகப் பரவல் காரணமாக, அதற்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்க அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டது. தீவிர ஆய்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.