எஸ் – 400 ரக ஏவுகனைகள் உற்பத்தியை ரஷ்யா தொடங்கியுள்ளது. இவை இந்தியாவுக்காக உற்பத்தி செய்யப்படுகின்றன.
New Delhi: பாதுகாப்பு துறையில் முக்கிய ஆயுதமாக கருதப்படும் எஸ்- 400 ரக ஏவுகனைகளின் உற்பத்தியை ரஷ்யா தொடங்கி விட்டதாக அந்நாட்டின் துணை தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்துள்ளார். இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்ட அனைத்து ஏவுகனைகளும் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், ‘எஸ் – 400 ஏவுகனைகளின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இவை இந்தியாவிடம் 2025-க்குள் வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.
இந்தியா – ரஷ்யா – சீனா நாடுகளின் முத்தரப்பு பேச்சுவார்த்தை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. இதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் மார்ச் 22 மற்றும் 23-ம்தேதிகளில் ரஷ்யாவுக்கு செல்லவுள்ளார்.
எஸ் – 400 என்பது எஸ் – 300 ரக ஏவுகனைகளின் அப்டேட் செய்யப்பட்ட வடிவம் ஆகும். இவை ரஷ்ய ராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
எஸ் ரக ஏவுகனைகளை அல்மாஸ் – ஆன்டே நிறுவனம் ரஷ்யாவுக்கு கடந்த 2007 முதற்கொண்டு தயாரித்து வழங்குகிறது.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் எல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக சீனாவுக்கும் நமக்கும் இடையில் உள்ள சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசிடம் இருக்கிறது.
இதேபோன்று பாகிஸ்தான் அச்சுறுத்தல், வங்கதேச பிரச்னை என பலவற்றையும் சமாளிக்க வேண்டியிருப்பதால் நவீன ஏவுகனைகளை வாங்கும் நிலைக்கு இந்தியா வந்துள்ளது.
எஸ்-400 ஏவுகணையை பொறுத்தவரையில் 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் சக்தி இந்த ஏவுகணைகளுக்கு உண்டு. ரஷ்யாவின் நவீன ரக ஆயுதமாக இந்த ஏவுகணை கருதப்படுகிறது. தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தி எஸ் – 400-க்கு உள்ளது.