This Article is From Aug 21, 2019

‘அவர் ஃப்ராடு மட்டுமல்ல கோழை…’- ப.சிதம்பரத்தை சாடும் ஆடிட்டர் குருமூர்த்தி!

தொடர்ந்து முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றக் கதவுகளைத் தட்டி வருகிறார் சிதம்பரம். 

‘அவர் ஃப்ராடு மட்டுமல்ல கோழை…’- ப.சிதம்பரத்தை சாடும் ஆடிட்டர் குருமூர்த்தி!

உச்ச நீதிமன்றமும், சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம், நேற்று மறுப்பு தெரிவித்துவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் சிதம்பரம் (P Chidambaram). அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றமும், அவருக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது. தொடர்ந்து முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றக் கதவுகளைத் தட்டி வருகிறார் சிதம்பரம். 

இந்நிலையில் அவரது அரசியல் எதிரிகள், சிதம்பரம் ‘தலைமறைவாக' இருப்பது குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்திய ரிசர்வ் வங்கியின் பகுதிநேர இயக்குநரும், பாஜக ஆதரவாளருமான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, “சிதம்பரம் தலைமறைவாக இருப்பது என்பது அவர் கைதாவதைவிட மோசமானதாகும். இதன் மூலம் அவர் குற்றம் சுமத்தப்பட்டவர் மட்டுமல்ல, அவர் ஒரு கோழையும் கூட என்பது தெரிகிறது. தவறான ஆவணங்களால் கைது செய்யப்பட்டு நேர்மையாக அதை எதிர்கொண்ட நாம் ப.சிதம்பரத்தை ஃப்ராடு என்று மட்டுமல்ல கோழை என்றும் அழைக்கலாம்” என்று கூறியுள்ளார். 

சிபிஐ-யும் அமலாக்கத் துறையும் ப.சிதம்பரத்தை கைது செய்ய முனைப்புக் காட்டி வரும் நேரத்தில் பாஜக-வின் எச்.ராஜா, “ப.சிதம்பரமும் அவரது குடும்பமும் ஊழலின் ஊற்றாகும். அவரை யாராலும் காப்பாற்ற முடியாது” என்று ட்வீட்டியுள்ளார். முன்னதாக பிரியங்கா காந்தி வத்ரா, “மிகவும் திறமையான மதிக்கப்படக்கூடிய ராஜ்ய சபா உறுப்பினரான ப.சிதம்பரம், நமது நாட்டுக்காக பல ஆண்டு காலம் விஸ்வாஸ்த்தோடு உழைத்திருக்கிறார். அவர் நாட்டின் உள்துறை மற்றும் நிதி அமைச்சராக இருந்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக துணிச்சலோடு உண்மையைப் பேசுவார். அரசின் குறைகளை சுட்டிக் காட்டுவார். ஆனால் அந்த உண்மைகள், கோழைகளுக்குப் பிரச்னையாக உள்ளது. அதனால் அவர் அலைக்கழிக்கப்படுகிறார். அவருக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம். என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் உண்மையை நிலைநாட்டப் போராடுவோம்” என்று கூறியிருந்தார். 

அதற்கு எச்.ராஜா, “அவருடனே இருங்கள். நேஷனல் ஹெரால்டு வழக்கில் உங்கள் குடும்பத்தோடு அவர் இருப்பார்” என்று கேலி செய்துள்ளார். 


 

.