Read in English
This Article is From Oct 20, 2018

சபரிமலை கோயில் திறக்கப்பட்டு 4வது நாள்: தொடரும் பதற்றம்..!

சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டு 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் 10 முதல் 50 வயதுக்குள் இருக்கும் ஒரு பெண் கூட கோயிலுக்குள் செல்ல முடியவில்லை

Advertisement
தெற்கு

சபரிமலை அடிவாரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது

Pamba/New Delhi:

சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டு 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் 10 முதல் 50 வயதுக்குள் இருக்கும் ஒரு பெண் கூட கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. இந்நிலையில் இன்றும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. காவல் துறையினருக்கு இணையாக போராட்டக்காரர்களும் சபரிமலைக்கு அடிவாரத்தில் குவிந்துள்ளனர்.

செப்டம்பர் 28 ஆம் தேதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 10 முதல் 50 வயதுக்கு இடையில் இருக்கும் பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நுழையக் கூடாது என்றிருந்த நடைமுறைக்கு முடிவுகட்டித் தீர்ப்பளித்தது.

இதையடுத்து கடந்த புதன்கிழமை சபரிமலை கோயிலின் நடை திறக்கப்பட்டது. அப்போதிலிருந்து பல பெண்கள் கோயிலுக்குள் செல்ல முயன்று வருகின்றனர். ஆனால், அங்கு கூடி இருக்கும் போராட்டக்காரர்கள் அவர்களை கோயிலுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

நேற்று கோயிலுக்குள் 2 பெண்கள், 300 போலீஸ் பாதுகாப்புடன் நுழைய இருந்தனர். அவர்கள் கோயிலுக்கு மிக அருகில் சென்ற போது, போராட்டக்காரர்கள் பெரும் அளவு கூடி, எதிர்ப்பு தெரிவித்தனர். கோயிலின் தலைமை அர்ச்சகரும், ‘பெண்கள் உள்ளே நுழைந்தால் கோயிலின் கதவைப் பூட்டி, சாவியை ஒப்படைத்து விடுவோம்' என்று அச்சுறுத்தினார். இதனால், இரண்டு பெண்களும் சபரிமலையிலிருந்து கீழே இறங்க அறிவுறுத்தப்பட்டனர்.

Advertisement

இன்று திருச்சியைச் சேர்ந்த லதா என்கின்ற 52 வயதுப் பெண், ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். அவரின் வயது குறித்து அடையாள அட்டையை சரிபார்த்த பின்னர் கோயில் நிர்வாகத்தினர் தரிசனத்துக்கு அனுமதி கொடுத்தனர்.

இந்நிலையில் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் ராகுல் ஈஷ்வர் என்பவர், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

Advertisement
Advertisement