சபரிமலையில் பெண்களைக் அனுமதித்த கேரளா அரசை கண்டித்து கோவை ரயில் நிலையத்தை இந்து மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் நேற்று அதிகாலை சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
கோயிலுக்குள் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததால், கோயிலின் புனிதம், பாரம்பரியம் கெட்டுவிட்டதாக கூறி தந்திரி ராஜீவரரூ சுத்தி பூஜை நடத்தினார். பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சுத்தி பூஜை நடத்தப்பட்டு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.
சபரிமலை கோயிலுக்குள் 50 வயதுக்கு குறைவான பெண்களை போலீஸார் அழைத்துச் சென்றதற்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கேரள அரசைக் கண்டித்தும் நேற்று பல இடங்களில் போராட்டம் நடந்தது.
கேரள அரசைக் கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதற்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது. இதுமட்டுமின்றி காங்கிரஸ் சார்பில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கேரளா அரசை கண்டித்து, கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கேரளா அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பிய அவர்கள், ரயில் நிலையத்திற்குள் செல்ல முயற்சித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.