கேரளாவின் நெடுஞ்சாலைகள் பலவற்றை போராட்டக்காரர்கள் மறித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
Thiruvananthapuram: சபரிமலையில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் 2 பேர் தரிசனம் செய்ததை தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் வெடித்தது. இந்த வன்முறையில் காயம் அடைந்த ஒருவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கேரளாவின் பல பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
நெடுஞ்சாலைகள் பலவற்றை மறித்து போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். கடைகள், மார்க்கெட்டுகள் உள்ளிட்டவை வலுக்கட்டாயமாக மூடவைக்கப்பட்டன.
பத்திரிகையாளர்கள் அளித்த தகவலின்படி, திருவனந்தபுரத்தில் தலைமை செயலகத்தின் வெளியே பாஜக தொண்டர்கள் மற்றும் அக்கட்சியின் இளைஞர் அணியினர் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
போராட்டத்தின்போது பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் சந்திரன் உன்னிதான் என்பவர் படுகாயம் அடைந்தார்.
அவர் சபரிமலை கர்மா சமிதியின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இருந்து வந்த கல் ஒன்று, உன்னிதானின் மண்டையை தாக்கியதால் அவர் படுகாயம் அடைந்ததாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக பிந்து மற்றும் கனகா துர்கா என்ற 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 2 பேர் நேற்று அதிகாலை 3.45-க்கு சபரிமலை கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பெரும் போராட்டம் கேரளாவில் வெடித்தது.