This Article is From Oct 15, 2018

சபரிமலை கோயில் திறப்பு: பெண்கள் நுழைவதைத் தடுக்க பெருகும் போராட்டம்!

சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலில், அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்திருந்தது

சபரிமலை கோயில் திறப்பு: பெண்கள் நுழைவதைத் தடுக்க பெருகும் போராட்டம்!
Thiruvananthapuram:

சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலில், அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக கேரள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தில் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த வாரம் புதன் கிழமை சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட உள்ளதால், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாதாந்திர சடங்குகளை செய்வதற்காக புதன் கிழமை கோயில் நடை திறக்கப்படும். அப்போது பெண்கள் வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், ‘பெண்களை கோயிலுக்குள் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வேண்டுமென்றால் கோயில் நுழைவாயிலில் நாங்கள் படுத்து வழியை முடக்குவோம்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

பாஜக தலைமையில் நடக்கும் இந்தப் போராட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், கேரள அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பலர், ‘சபரிமலையைக் காப்பாற்றுங்கள்’ என்ற பதாகையையும் வைத்திருந்தனர். 

வரும் நவம்பர் 17 ஆம் தேதி முதல், 3 மாதங்கள் நடைபெறும் மண்டலம்- மகர விளக்கு ஆரம்பமாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில் தான் பல்வேறு இடங்களில் இருந்து ஐயப்பப் பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள். இது குறித்தான திட்டமிடலுக்காக ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் தேவசம் போர்டு, தலைமை அர்ச்சகரின் குடும்பம், ஐயப்ப சேவா சங்கத்தினர், பண்டலம் ராயல்ஸ் உள்ளிட்டவர்களுடன் நாளை சந்திப்பு நடத்த உள்ளது. 

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் போராட்டத்தால் கேரளாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலக் குழுக்கள், ‘கேரள அரசு, சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழையக் கூடாது என்று கூறும் வகையிலான அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்’ என்று கோரி வருகின்றன.

.