பம்பை அடிவார முகாமில் 11 பெண்கள் உள்ளனர். அவர்கள் மலைக்கு செல்வதாக அறிவித்துள்ளனர்.
Pamba, Kerala: சபரி மலை விவகாரத்தில் முக்கிய திருப்பமாக பெண்கள் குழுவினர் மலைக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். சூரிய உதயம் ஏற்படுவதற்கு முன்னதாகவே, 6 பெண்கள் சபரிமலைக்கு செல்வற்காக பம்பை அடிவார முகாமுக்கு வந்துள்ளனர். மதுரையை சேர்ந்த அவர்கள் சாலை மார்க்கமாக சபரிமலை வந்திருக்கிறார்கள்.
பம்பைக்கும் சபரிமலைக்கும் இடையே 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. பம்பையில் இருந்து அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 30 பெண்கள் மலைக்கு இன்று செல்ல உள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் தீவிரம் அடைந்துள்ளனர். எந்த வகையிலும் அவர்களை சபரிமலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, போலீசார் சபரிமலைக்கு செல்லும் பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர்கள், மலைக்கு சென்று தரிசனம் செய்த பின்னர்தான் வீடு திரும்புவோம் என்று கூறி விட்டனர்.
சுமார் 50 பேர் கொண்ட பெண்கள் குழு சபரிமலைக்கு வந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா என பல பகுதிகளை சேர்ந்த அவர்கள் ஒன்றிணைந்து ஒரு குழுவாக மாறியுள்ளனர்.
பெண்கள் குழுவுக்கு எதிராக எதிர்ப்பு தீவிரமடைந்த நிலையில் காவல்துறையினர் பெண்கள் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தி பயணத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியை அடைந்ததது. பெண்கள் குழு எதிர்ப்பை மீறி நிச்சயமாக கோயிலுக்குள் செல்வோம் என்று கூறியதையடுத்து காவல் துறையினர் அவர்களுக்கு பாதுகாப்பை இறுதி வரை வழங்க முடிவெடுத்துள்ளது.
பெண்கள் குழுவில் முதல் 11பெண்கள் சபரிமலை கோயிலுக்கு தக்க பாதுகாப்புடன் அழைத்து செல்ல உள்ளோம். மூத்த அதிகாரிகளின் உத்தரவுகாக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
பெண்கள் குழுவைச் சேர்ந்த பெண்ணொருவர் “நாங்கள் கருத்தியலால் ஒன்றுபட்டவர்கள். எங்கள் குழுவில் சில தலித் பெண்கள்கூட உள்ளனர். கேரளா மாநில காவல்துறையின் பாதுகாப்புடன் எங்களுக்கான உரிமையை நாங்கள் இன்று பெறுவோம் என்று கூறினார்.
மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி சென்னையைச் சேர்ந்தவர். பெண்கள் முன்னேற்ற குழுவைச் சேர்ந்தவரான இவர். NDTVயிடம் பேசிய போது “உண்மையான பக்தர்கள், முறையான சபரிமலை செல்வதற்கான விரதங்களை இருந்துதான் வந்துள்ளார்கள். குழுவாக வந்துள்ள நாங்கள் நிச்சயமாக கோயிலுக்குள் நுழைவோம்” என்று கூறினார்.
செப்டம்பர் மாதத்தின்போது, அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. மாதவிடாய் வயது பெண்களை தவிர்த்து சிறுமிகள், வயது முதிர்ந்தவர்களை அனுமதிக்கலாம் என்பது எதிர்த்தரப்பினரின் வாதமாக உள்ளது.
உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவால் ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த பழக்கம் மாற்றி அமைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி சில பெண்கள் அமைப்பினர் சபரி மலைக்கு வர முயன்றினர். ஒன்றிரண்டு பேர் மட்டுமே வந்ததால் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கூறி போலீசார் அவர்கள் வழியனுப்பி வைத்து விட்டனர்.
இந்த நிலையில் பெண்கள் அமைப்பினர் ஒரு குழுவாக புறப்பட்டு சபரிமலைக்கு வந்திருக்கின்றனர். அவர்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு தருவது என்பது குறித்து உயர் அதிகாரிகளின் தகவலைப் பெற காத்திருப்பதாக, பம்பை காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க : சபரிமலைக்கு செல்லும் பெண்கள் குழு: மனிதி வெளியே வா