This Article is From Oct 22, 2018

சபரிமலை கோயில் இன்று மூடப்படுகிறது: ஊடகங்களுக்கு எச்சரிக்கை!

இன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை பூஜைகளுக்குப் பின் மூடப்படுகிறது

சபரிமலை கோயில் இன்று மூடப்படுகிறது: ஊடகங்களுக்கு எச்சரிக்கை!

சபரிமலையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது

ஹைலைட்ஸ்

  • இன்று 10 மணிக்கு சபரிமலை நடை சாத்தப்படும்
  • ஊடகங்கள் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்
  • சபரிமலையில் 1000-த்துக்கும் அதிகமான பக்தர்கள் தங்கி வருகின்றனர்
Sabarimala, Kerala:

உச்ச நீதிமன்றம், அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் போகலாம் என்று தீர்ப்பளித்தப் பிறகு அக்டோபர் 18 ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை பூஜைகளுக்குப் பின் மூடப்படுகிறது. 5 நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நடை சாத்தப்படுகிறது. இந்த 5 நாட்களில் 10 முதல் 50 வயதுகுட்பட்ட 9 பெண்கள், கோயிலுக்குள் நுழைய முயன்றனர். ஆனால், பக்தர்களின் தொடர் எதிர்ப்பால் அவர்களில் யாருமே ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.

சபரிமலை அடிவாரமான பம்பாவிலிருந்து பல ஊடக நிறுவனங்கள், நிலைமை குறித்து தொடர்ந்து செய்தி தெரிவித்து வருகின்றன. அவர்கள் மீது இன்று தாக்குதல் நடத்தப்படும் என்று போலீஸுக்குத் தகவல் வந்த நிலையில், அங்கிருந்து அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சபரிமலையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கோயில் நிர்வாகம் அரசுக்கு, ‘பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை ஏதாவது மீறப்பட்டால், கோயில் நடை சாத்தப்பட்டுவிடும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஆயிரத்துக்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கோயில் வளாகத்துக்கு அருகில் தொடர்ந்து தங்கி வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

பாஜக, கட்சி சார்பில் எவரும் கோயிலுக்குப் பக்கத்தில் தங்கவைக்கப்படவில்லை என்று தெரிவத்துள்ளது. காங்கிரஸ் கட்சி, சபரிமலை விவகாரத்துக்கு தீர்வு காண, மத்திய அரசு, அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

கேரள மாநில பாஜக, ‘எங்கள் தொண்டர்கள், ஐயப்பன் கோயிலில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை குறித்து மக்களிடம் பரப்புரை செய்வார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்' என்று கூறியுள்ளது.

அதே நேரத்தில் சபரிமலை விவகாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘சபரிமலையில் பல கோயில்களில் இல்லாத ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அனைத்து மத நம்பிக்கையாளர்களும் ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முடியும். இந்த நடைமுறைக்கு எதிராகவே சங்பரிவார அமைப்புகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் இருந்துள்ளனர். சபரிமலையில் இந்தத் தனித்தன்மையை அவர்கள் குலைக்க தொடர்ந்து முயன்று வருகின்றனர்' என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

.