சபரிமலைக்குச் செல்லும் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது
New Delhi: சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்னர் தீர்ப்பளித்தது. இந்நிலையில் இன்று சபரிமலை கோயில் மாலை 5 மணி அளவில் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, பெண்கள் கோயிலுக்குள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு குறித்து ஐயப்ப பக்தர்களும், இந்து குழுக்களும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால், கேரளாவில் இன்று பதற்றமான சூழல் நிலவுகிறது.
நேற்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, தீர்ப்பு குறித்து விவாதிக்கக் கூடியது. இந்த சந்திப்பில் பண்டலம் ராஜ குடும்பம், ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சந்திப்பில் ஒரு ஸ்திரமான முடிவு எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று கேரளாவுக்குள் வரும் வண்டிகளை பல பெண் ஐயப்ப பக்தர்கள் தடுத்து சோதனையில் ஈடுபட்டனர். வண்டியில் பெண்கள் யாரேனும் இருந்தால், அவர்களை திரும்ப செல்லுமாறு ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில், பெண்களை தடுக்கும் விதத்தில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்றும், மீறி நடப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேளர காவல் துறை தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக இன்று காலை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘கேரள அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யாது. சபரிமலை கோயிலுக்குள் அனைவரும் பாதுகாப்பாக செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.