கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஹைலைட்ஸ்
- கொரோனாவை எதிர்கொள்ள கேரள அரசு தீவிர நடவடிக்கை
- விழாக்களை ரத்து செய்யுமாறு கோயில்களுக்கு தேவசம் போர்டு வேண்டுகோள்
- கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 12-ஆக உயர்வு
Thiruvananthapuram: கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சபரி மலைக்கு வருவதைப் பக்தர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று தேவசம் போர்டு வேண்டுகோள் வைத்துள்ளது.
இதுதொடர்பாக தேவசம் போர்டின் தலைவர் என். வாசு, 'பக்தர்கள் அனைவரும் சபரி மலைக்கு வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் அனைத்து கோயில்களும் விழாக்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளன. அங்கு சினிமா தியேட்டர்கள் நாளை முதல் மார்ச் 31-ம்தேதி வரையில் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மலையாள சினிமா தியேட்டர் சங்கத்தினர் கொச்சியில் கூடி இந்த முடிவை எடுத்துள்ளனர்.
முன்னதாக கேரளாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் கூடுதலுக்குக் கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பினராயி விஜயன் கூறியதாவது-
8, 9, 10-ம் வகுப்புகளுக்கான தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். தங்களது பயண விவரத்தை மறைத்து கொரோனா வைரஸ் பரவுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து கேரளா திரும்பியவர்கள் சுகாதாரத்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். விமான நிலையங்களில் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூடங்கள் மாநிலத்தில் அதிகப்படுத்தப்படும்.
வதந்தி,பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவுக்கு வெளியே பயணம் சென்றவர்களின் விவரங்கள் விமான நிறுவனங்களிலிருந்து பெறப்படும். சானிட்டைஸர், சுவாசக் கருவிகள் மக்களுக்குத் தங்கு தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.