SABARIMALA: சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயில் இன்று மாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 10.30 வரை சிறப்பு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்ற முறை ஏற்பட்ட பதற்றத்தைத் தடுக்க கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக கோயிலுக்கு அருகில் 2,300 பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 20 பேர் கொண்ட கமாண்டோ குழுவும் சபரிமலையில் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் சமீபத்தில், சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்லக் கூடாது என்றிருந்த தடையை விலக்கியது. அனைத்து வயதுப் பெண்களும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
முக்கியமான 10 விஷயங்கள்:
- சனிக்கிழமை முதல், சபரிமலை கோயிலைச் சுற்றி, 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. பாதுகாப்பு கருதியும், பக்தர்களின் நலன் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, கடந்த மாதம் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, பல பெண்கள் மற்றும் செயற்பாட்டளர்கள் ஆலயத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால், சபரிமலையில் குவிந்திருந்த வலதுசாரி போராட்டக்காரர்களால் அவர்கள் தொடர்ந்து விரட்டியடிக்கப்பட்டனர். இதனால் சென்ற முறை நடை திறக்கப்பட்ட போது ஒரு இள வயது பெண் கூட கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.
- இன்று 5 மணிக்கு சிறப்பு பூஜைக்காக கோயில் திறக்கப்படும் என்றும், நாளை இரவு 10 மணிக்கு கோயில் மூடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- தமிழகம் மற்றும் ஆந்திராவிலிருந்து ஐயப்ப பக்தர்கள் எருமெலியில் குவிந்துள்ளனர். அவர்கள் இன்று தரிசனத்துக்காக கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
- கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், ‘ஐயப்ப பக்தர்களுக்கு தரிசனம் செய்ய நாங்கள் முழு பாதுகாப்பு அளிப்போம். இதுவரை 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட எந்தப் பெண்களும் பாதுகாப்பு கோரி எங்களிடம் வரவில்லை' என்று கூறியுள்ளார்.
- சபரிமலா கர்மா சமிதி என்கிற வலதுசாரி அமைப்பு, ஊடகங்களுக்கு ‘பெண் செய்தியாளர்களை சபரிமலைக்கு அனுப்ப வேண்டாம்' என்று வேண்டுகோள் விடுத்து கேட்டுள்ளது.
- சமிதி அமைப்பு, ‘உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீடு நவம்பர் 14 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சொல்லப்பட்டாலும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது கேரள அரசு' என்று குற்றம் சாட்டியுள்ளது.
- ஐயப்பா தர்மா சேனாவின் தலைவரும் பிரபல வலதுசாரி செயற்பாட்டாளருமான ராகுல் ஈஷ்வர், ‘போலீஸைப் போல நாங்களும் முழு முன்னெச்சரிக்கையுடன் தான் இருக்கிறோம்' என்று பகீர் கருத்து கூறியுள்ளார்.
- சபரிமலை குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு அளித்ததற்கு எதிராக செயல்பட்டதற்காக ராகுல் ஈஷ்வர் சென்ற மாதம் இரண்டு முறை கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பிணையில் வெளி வந்திருக்கிறார்.
- சென்ற மாதம் சபரிமலையில் நடந்த வன்முறை தொடர்பாக, 3700 பேர் கைது செய்யப்பட்டனர். 545 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.