காலம் காலமாக இருந்து வந்த பழக்கத்திற்கு தடை விதிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
New Delhi/Thiruvananthapuram: சபரி மலையில் அனைத்து பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இத்துடன், இதுதொடர்பான 49 வழக்குகளையும் ஜனவரி 22-ம் தேதி திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கேரள மாநிலம் சபரி மலை ஐய்யப்பன் கோயிலில் தரிசனம் செய்வதற்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காலம் காலமாக இந்த முறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், அனைத்து பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி பரபரப்பான தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர். வயது வரம்பின்றி அனைத்து பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என அன்றைக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பு குறிப்பிட்ட தரப்பினரிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் பெருவாரியான மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மாட்டோம் என அம்மாநில அரசு அறிவித்தது.
இதேபோன்று கோயிலை நிர்வாகம் செய்து வரும் திருவிதாங்கூர் போர்டும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்போவது இல்லை என்று அறிவித்தது. இதனால் கேரளாவில் பெருவாரியான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இருப்பினும், ஐயப்ப பக்தர்கள் தரப்பில் இருந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை தலைமை நீதிபதி கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதில், வழக்கு தொடர்பான 49 வழக்குகளையும் ஜனவரி 22-ம் தேதி திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது