Sabarimala temple opening: நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. அடுத்த 2 மாதங்களுக்கு கோயில் திறந்த நிலையில் தான் இருக்கும்
New Delhi: அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, மூன்றாவது முறையாக கோயில் நடை நேற்று திறக்கப்பட்டுள்ளது. பெண்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாநிலம் தழுவிய பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன இந்து அமைப்புகள்.
நேற்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு கோயில் திறக்கப்பட்டிருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள்.
10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கேரள போலீஸிடம் தாங்கள் தரிசனம் செய்யப் போவதாகவும், அதற்கு உரிய பாதுகாப்பு கொடுக்குமாறும் கேட்டுள்ளனர். சபரிமலையைச் சுற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பெண்களை கோயிலுக்குள் உள்ளே விடாதவாறு பார்த்துக் கொள்வோம் என்று வலதுசாரி போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்தான லைவ் அப்டேட்ஸ்:
மதியம் 12:14 - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐக்கிய வேதி அமைப்பின் மாநில தலைவர் கே.பி. சசிகலா நேற்றிரவு கைது செய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கு நடவடிக்கைக்காக இந்த கைது நடந்தது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரவு கோயில் வளாகம் பூட்டப்பட்ட பின்னர் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என காவல் துறை தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காலை 11:26 - பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கேரள அரசு பேருந்துகள் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதுவரைக்கும் எந்தவொரு பேருந்தும் தடுத்து நிறுத்தப்படவில்லை.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பேருந்துகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் இயங்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபரிமலைக்கு பலத்த பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுவதாக கேரள அரசு போக்குவரத்தின் மேலாண்மை இயக்குனர் டாமின் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் அருகேயுள்ள பல்ராமபுரம் பகுதியில் போராட்டக்காரர்கள் கேரள அரசுப் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தினர்.
காலை 11:09 - பாஜக தலைவர் விவி ராஜேஷ், சபரிமலையிலிருந்து புறப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. போலீஸின் உத்தரவை ராஜேஷ் மீறினால் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
காலை 11:06 - ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் அடிவாரமான பாம்பாவிலிருந்து தங்களது யாத்திரையை ஆரம்பித்தனர். சபரிமலை கோயில் 62 நாட்களுக்கு திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 10:13 - நேற்று செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் சபரிமலைக்கு செல்வதற்காக கொச்சி விமானநிலையத்திற்கு வந்தார். அங்கேயே அவருக்கு எதிராக போராட்டம் செய்யப்பட்டதால், மீண்டும் அவர் சொந்த ஊர் நோக்கி திரும்ப செல்லும்படியானது
காலை 8:37 - கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம், ‘அனைத்து வயதுப் பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம்' என்று உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இதுவரை ஐயப்பன் கோயில் 3 முறை திறக்கப்பட்டுள்ளது.