பைலட் தரப்பில், ராஜஸ்தான் முதல்வர் பதவி கொடுக்கப்பட்டால் வரத் தயார் என்று சொல்லப்படுகிறதாம்.
ஹைலைட்ஸ்
- சச்சின் பைலட்டின் அனைத்துப் பதவிகளும் பறிப்பு
- அவரின் பதிலை ட்வீட்டாக பதிவிட்டுள்ளார் பைலட்
- ராஜஸ்தான் அரசியல் குழப்பம் உச்சத்தை எட்டயுள்ளது
Jaipur/ New Delhi: ராஜஸ்தானில் உள்ள சொந்த அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டிற்கு எதிராக காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. அவரது ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து முதல்வர் அசோக் கெலோட் தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது மட்டுமே ஒரே தீர்வு என பாஜக தெரிவித்துள்ளது.
கெலோட், தனக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்தித்ததைத் தொடர்ந்து, மொத்தமுள்ள 200 எம்எல்ஏக்களில், தங்களுக்கு 106 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளது காங்கிரஸ் தரப்பு. எனினும், இன்று காலை கெலோட் முகாமில் இருந்து 3 எம்எல்ஏக்கள் வெளியேறியதாக தெரிகிறது.
சச்சின் பைலட், தனது முகாமில் 30 எம்எல்ஏக்கள் உள்ளதாக தெரிவித்த நிலையில், நேற்றைய தினம் வெளியிட்ட வீடியோவில் 16 எம்எல்ஏக்கள் இருப்பதாக தெரிகிறது.
இப்படி அடுத்தடுத்து பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி, பைலட்டின் பதவிகளைப் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அதற்கு அவர், “உண்மை மறைக்கப்படலாம். ஆனால் அதை வீழ்த்த முடியாது” என பன்ச் கொடுக்கும் வகையில் ட்வீட்டியுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக ராஜஸ்தான் காங்கிரஸ் பிரச்னை பற்றி பரபரக்கப்பட்டு வரும் நிலையில், முதன் முறையாக பொதுத் தளத்தில் வாய் திறந்துள்ளார் பைலட்.
அவர் இதற்கு முன்னர் NDTV-யிடம் அளித்தப் பேட்டியில், “யாருக்கும் தங்களின் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்கிற எண்ணம் இருக்காது. ஆனால், இதைப் போன்ற அவமானப்படுத்தப்படும் சூழலில் இருக்க விரும்பவில்லை. என்னுடைய ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகமாக காயப்பட்டுள்ளனர். அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்றாற் போல நான் நடந்து கொள்ள வேண்டும்,” என சூசகமாக தெரிவித்தார்.
ராஜஸ்தான் காங்கிரஸில், சச்சின் பைலட்டிற்கும் அசோக் கெலோட்டிற்கும் பல்வேறு கட்டங்களில் உரசல் போக்கு இருந்து வந்தாலும், அது சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்திற்குப் பின்னர்தான் பூதாகரமானது.
பாஜக தரப்பு, ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்க முயற்சிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இது குறித்து ராஜஸ்தான் போலீஸ் விசாரிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த விசாரணை வளையத்திற்குள் சச்சின் பைலட்டும் கொண்டு வரப்பட்டார். இந்த நடவடிக்கைக்குப் பின்னர்தான் பைலட், கொதித்தெழுந்ததாக அவருக்கு நெருக்கமாக உள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தானில் காவல் துறை, முதல்வர் கெலோட்டின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவே பிரச்னையின் மூல காரணமாக மாறியுள்ளதாம்.
காங்கிரஸ் தரப்பு, பைலட்டின் பதவிகளைப் பறித்தாலும் தொடர்ந்து சமாதானத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளது. பைலட் தரப்பில், ராஜஸ்தான் முதல்வர் பதவி கொடுக்கப்பட்டால் வரத் தயார் என்று சொல்லப்படுகிறதாம். அதற்கு காங்கிரஸ் தரப்பு, ‘அது மட்டும் முடியாது. வேறு எதுவானாலும் சரி. உங்களுக்கு இன்னும் நல்லப் பதவிகள் தரத் தயார். உங்கள் ஆதரவாளர்களுக்கு அதிக பதவிகள் தருகிறோம்' என்று பேரம் பேசுகிறதாம்.