Rajasthan: சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் பணியில் காங்கிரஸ்!
ஹைலைட்ஸ்
- அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் பணியில் காங்கிரஸ்
- பைலட்டின் துணை முதல்வர் பதவியும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிப்பு
- அசோக் கெலாட் பதவியில் நீடிக்க 101 எம்எல்ஏக்களின் பலம் தேவை.
New Delhi: ராஜஸ்தானில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் துவங்கியுள்ளது. இதுதொடர்பாக 19 அதிருப்தி எம்எல்ஏக்களும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்குமாறு சட்டமன்ற சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, பெரும்பான்மை எண்ணிக்கையை குறைக்க வழிவகை செய்துள்ளது. தலைமைக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து, காங்கிரஸ் அரசு விளிம்பு நிலையில் உள்ளது.
சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து போர்க்கொடி தூக்கிய மேலும் இரண்டு அமைச்சர்களின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
சச்சின் பைலட் மற்றும் இதர அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கட்சி எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்திற்காகவும், 2 எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்த காரணத்திற்காகவும் தங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து, முதல்வர் அசோக் கெலாட் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களின் இடத்தை ஈடு செய்ய அமைச்சரவையில் இன்று மாற்றங்களை கொண்டு வருவார் என்று தெரிகிறது.
மொத்தமுள்ள 200 எம்எல்ஏக்களில் காங்கிரஸ் தங்களுக்கு 106 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்திருந்தது. எனினும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு 100ஐ விட குறைந்ததாக தெரிகிறது. பாரதிய பழங்குடியினர் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் காங்கிரஸூக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். தொடர்ந்து, அசோக் கெலாட் பதவியில் நீடிக்க 101 எம்எல்ஏக்களின் பலம் தேவை.
இதையடுத்து, திங்களன்று, முதல்வர் இல்லத்தில் நடந்த கூட்டத்தை தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் சொகுசு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு காங்கிரஸ் எம்எல்ஏவுக்கும் தற்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சச்சின் பைலட் காங்கிரஸூக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதற்கு முன்பு 107 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 13 சுயேட்சை எம்எல்ஏக்கள் மற்றும் 5 சிறிய கட்சிகளின் ஆதரவு என காங்கிரஸூக்கு மொத்தமாக 122 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. தற்போது 90 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 7 சுயேட்சை எம்எல்ஏக்கள் மற்றும் 3 சிறிய கட்சிகளின் ஆதரவு மட்டுமே உள்ளது.
பாரதிய பழங்குடியினர் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் காங்கிரஸூக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் வெளியான வீடியோவில், பாரதிய பழங்குடியினர் கட்சி எம்எல்ஏ ஒருவர் தான் பிணயக் கைதியாக வைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய கார் சாவியை போலீசார் எடுத்துச்சென்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.