சச்சின் டெண்டுல்கர் தனது பயிற்சியாளர் மரணத்துக்கு மனமுருகிய இரங்கலை தெரிவித்தார். அது மட்டுமின்றி இறுதி ஊர்வலத்தில் அச்ரேக்கரின் உடலை சுமந்து அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
இந்திய அணியின் முன்னணி வீரர் சச்சின் டெண்டுல்கரை ஆரம்பகாலத்தில் சிறந்த வீரராக மெருகேற்றியவர் அச்ரேக்கர். துரோனாச்சார்ய விருது வென்ற கிரிக்கெட் பயிற்சியாளர் ரமகந்த் அச்ரேக்கர் 87 வயதில் காலமானார். வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றி இருந்த அவர் இன்று காலமானார்.
சச்சினின் சிறுவயது பயிற்சியாளரான இவர், பத்ம ஸ்ரீ விருது வென்றவர். சச்சின் மட்டுமின்றி புகழ்பெற்ற வீரர்களான காம்ப்ளி, சமிர் திகே, பல்விந்தர் சிங் சாந்து, ப்ரவீண் ஆம்ரே ஆகியோருக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.
இவருக்கு இரங்கல் தெரிவித்து சச்சின் பதிவிட்டுள்ள ட்விட்டில் '' கிரிக்கெட் எனும் சொர்க்கத்தில் அச்ரேக்கர் சாரால் வாழ்ந்தேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சச்சின் தனது பதிவில் ''அவரது எல்லா மாணவர்களை போல்தான் நானும், நான் அவரிடம் கிரிக்கெட்டை ஆதியிலிருந்து கற்றவன், அவரது பங்களிப்பை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. அவர்தான் எனது கிரிக்கெட் வாழ்வுக்கு அடித்தளமிட்டவர் என்றார். 1943ல் கிரிக்கெட் ஆடத்துவங்கிய அச்ரேக்கர் ஒரே ஒரு முதல் தர போட்டியில் ஆடியவர் அதுவும் அனைத்திந்திய மாநில வங்கிக்கும் ஹைதராபாத்துக்கும் இடையேயான போட்டி அது.
சச்சின் கடந்த மாதம் அச்ரேக்கரை சந்தித்ததாகவும், அவருடைய மாணவர்கள் சிலரோடு நேரத்தை செலவிட்டதாகவும், பழைய நினைவுகளை பகிர்ந்ததையும் நினைவு கூறினார். எங்கிருந்தாலும் எங்களை பயிற்றுவித்துக் கொண்டே இருங்கள்'' என்று கூறினார்.
கிரிக்கெட் வீரர்கள் பலரும் அச்ரேக்கருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.