ஜூன் 5 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது முதல் போட்டியை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இன்று முதல் இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இந்த உலகக் கோப்பையில் ‘மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர், வர்ணனையாளராக களமிறங்க உள்ளார். இதன் மூலம் தனது கிரிக்கெட் வாழ்வில் புதிய இன்னிங்ஸை சச்சின் தொடங்க இருக்கிறார்.
இன்று லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா நாடுகளுக்கு இடையில் தொடரின் முதல் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியின் போதே டெண்டுல்கர், வர்ணனையாளராக பங்கேற்க உள்ளார்.
மேலும் சச்சின், இன்று மதியம் 1:30 மணிக்குத் தொடங்கும் ஃபிலிப்ஸ் ஹியூ ப்ரீ-லைவ் கிரிக்கெட் ஷோவிலும் கலந்து கொண்டு பேச உள்ளார். அந்த நிகழ்ச்சியில் பிரத்யேகமாக “சச்சின் ஓப்பன்ஸ் அகெயின்” என்ற பகுதி இடம் பெற உள்ளது. சச்சின் மட்டும் அல்லாமல் இந்தியா மற்றும் பல முன்னணி கிரிக்கெட் நாடுகளின் முன்னாள் வீரர்களும் அவருடன் இணைந்து வர்ணனை செய்ய உள்ளனர்.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, சச்சின் பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். 6 உலகக் கோப்பையில் விளையாடியுள்ள சச்சின், 2,278 ரன்களை குவித்துள்ளார்.
மேலும் ஒரே உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் முதலிடத்தை சச்சின்தான் வைத்துள்ளார். அவர் 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையின் போது 11 போட்டிகளில் விளையாடி 673 ரன்கள் குவித்தார்.
ஜூன் 5 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது முதல் போட்டியை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது.