மோடி தலைமையிலான குழு அலோக் வர்மாவை சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்கியது
New Delhi: சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து தீயணைப்பு துறை தலைவராக மாற்றம் செய்யப்பட்ட அலோக் வர்மா அந்த பொறுப்பை ஏற்க மறுத்து பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
வழக்கு ஒன்றில் இருந்து தொழிலதிபர் ஒருவரை விடுவிக்க லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், நம்பர் 2 இடத்தில் இருந்த இணை இயக்குனர் ராகேஷ் அஸ்தனாவுக்கும் இடையே கடும் பனிப்போர் ஏற்பட்டது.
விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலையிட்டு இருவரையும் நேரில் அழைத்துப் பேசினார். இதன்பின்னர் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரை செய்ததன் பேரில் இருவரும் கட்டாய விடுப்பில் கடந்த அக்டோபர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன்பின்னர் நாகேஸ்வர ராவை தற்காலிக இயக்குனராக மத்திய அரசு நியமனம் செய்தது. அப்போது, அலோக் வர்மாவின் டீமில் இருந்து முக்கியமான 10 பேரை பணியிட மாற்றம் செய்து நாகேஸ்வர ராவ் உத்தரவிட்டார்.
இதற்கிடையே கட்டாய விடுப்பில் செல்ல வைக்கப்பட்டது மற்றும் இடைக்கால சிபிஐ இயக்குனரை நியமித்தது ஆகியவற்றை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கில் நேற்று முக்கிய தீர்ப்பு வெளிவந்தது. அப்போது, அலோக் வர்மா மீண்டும் தனது பணியில் தொடரலாம் என்றும் கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுக்க முடியாது என்று தீர்ப்பில் குறிப்பிட்டது.
இதையடுத்து மீண்டும் அவர் சிபிஐ இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் பின்னர் நேற்று பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு நேற்று கூடி, அலோக் வர்மாவை பணியிட மாற்றம் செய்து அவரை தீயணைப்பு துறை தலைவராக நியமனம் செய்தது. அவருக்கு பதிலாக மீண்டும் நாகேஸ்வர ராவை சிபிஐ இயக்குனராக நியமித்தது.
இந்த நிலையில், புதிய பொறுப்பான தீயணைப்பு துறை தலைவர் பணியை ஏற்க மறுத்து அலோக் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.