This Article is From Jul 24, 2020

எம்.ஜி.ஆருக்கு காவித்துண்டா? காட்டுமிராண்டித்தனம் என விளாசிய முதல்வர்!!

புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது. இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

Advertisement
தமிழ்நாடு Written by

தமிழகத்தில் சமீபக் காலமாக அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கு காவி சாயம் பூசும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து, களங்கப்படுத்திய கொடுஞ்செயல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது.

Advertisement

இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமீபகாலத்தில் இதுபோன்ற, சமூகத்திற்கு தொண்டாற்றிய  தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற இழிசெயல்கள் மிகுந்த வருத்தத்தை தருகிறது.  உயரிய கொள்கை என்பது நமது லட்சியங்களை பிறர் ஏற்க பாடுபடுவது மட்டுமல்ல, மாற்று கருத்துக்களையும், குறிப்பாக மக்களின் நம்பிக்கைகளையும் மதிப்பதும் ஆகும்.

கருத்து சுதந்திரமென்ற பெயரில் தரமற்ற விமர்சனங்களால்  பிறர் மனங்களை காயப்படுத்துவது, மனித நாகரீகத்திற்கு மாறான செயலாகும்.  மொழியால், இனத்தால், மதத்தால், சாதியால் வேறுபட்டு இருந்தாலும், இந்தியர் என்கிற ஒற்றைச் சொல்லில் பெருமிதம் கொண்டெழுகிற நமது ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கவும்,

Advertisement

அதன்மூலம் ஓட்டு அரசியல் பிழைப்பிற்கும் சிலர் திட்டமிடுவதை ஒரு போதும் தமிழினம்  ஏற்காது.

ஆன்மீக செம்மல் அரவிந்தரும், உணர்ச்சிக் கவிஞர் பாவேந்தரும் உதித்த புதுச்சேரி மண்ணில், புரட்சித் தலைவரின் திருவுருவச் சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தியிருக்கும் விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து, அவர்களை பின்னால் இருந்து இயக்கும் சமூக விரோதிகளையும் இனம் கண்டு, சமூகத்தின் முன்னும், சட்டத்தின் முன்னும் அவர்களை தோலுரித்து காட்டிட, கடுமையான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள புதுச்சேரி முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

Advertisement

என முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement